அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்குவது குறித்து அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு, தனது இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதிய முறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது. பின்னர், உரிய அறிக்கையினை செப்.2025-க்குள் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.
194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் கூட்டம்
அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.
கடந்த எட்டு மாதங்களில், 7.36 இலட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 இலட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.
சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஒன்றிய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
இச்சூழ்நிலையில், இக்குழுவானது நேற்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
நம்பகத்தன்மையினை இழந்து விட்டது
இதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், ’’ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கை அளித்ததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. கால நீட்டிப்பு என்பதை நேரிடையாகப் பெறாமல் மறைமுகமாக பெறுவதை ஏற்க இயலாது. ஓய்வூதியக் குழு தன் நம்பகத்தன்மையினை இழந்து விட்டது’’ என்று தெரிவித்துள்ளது.