தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த அறிவியல் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த பாடப்பிரிவில் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 18 மாணவர்கள் கல்வி பயில உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக கல்லூரி, மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த அறிவியல் பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளங்கலை இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றில் இந்த பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ட படிப்பை முடிக்கும் மாணவர்கள் மெல்போன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இணையானவர்களாக கருதப்படுவர்.
இளங்கலை இயற்பியல், வேதியியல் அல்லது கணிதம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் பொதுவாக அவர்களது துறை சார்ந்து மட்டுமே அதிகம் படிப்பர். கணிதம் எடுக்கும் மாணவர் இயற்பியல் மற்றும் வேதியியலின் அடிப்படை மட்டுமே தெரிந்து கொள்வார். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பாடப்பிரிவு மூலம் கணிதம் படிக்கும் மாணவர்கள் அதில் வரக்கூடிய சமன்கள் சூத்திரம் ஆகியவை இயற்பியல், வேதியியலில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாக கற்று அறிந்து கொள்வார்கள். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து மாணவர்களும் கணிதம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை சரிசமமாக கற்றிருப்பர். மூன்றாம் ஆண்டில் மாணவர்களுக்கு எந்த துறை பிடிக்கின்றதோ அதை தேர்வு செய்து, 5 மற்றும் 6வது செமஸ்டரில் படிப்பார்கள். அவ்வாறு படிக்கும் பொழுது மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள பாடப்பிரிவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இணையாக திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பட்டப் படிப்பிற்கான வகுப்பறைகளை திறந்து வைத்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி , பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: பொதுவாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை அறிவியல் படிப்புகள் இருக்காது. முதுநிலை படிப்புகள் மட்டுமே இருக்கும். தற்போது உலகிலேயே பெயர் பெற்ற மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் சென்னை பல்கலைக்கழகம் இணைந்து அறிவியல் பிரிவில் இளங்கலை அறிவியல்(ஒருங்கிணைந்த அறிவியல்) பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவிலேயே உலகத்தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க இயலும். இதேபோன்று வருங்காலங்களில் உலகின் பிரபலமான பல பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து பல்வேறு பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத் தேர்வு முறைகேடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், 2020ல் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ஊழியர்கள் 5 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.