சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் திரைப்படம் தமிழகத்திலும் வெளியாக இருக்கிறது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்தப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழுக்கு வரும் காட்ஃபாதர்
ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது. அத்துடன் இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
லூசிபர் ரீமேக்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா நடித்திருந்த நிலையில், நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்து இருந்தார்.
இவர்களுடன் சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.