இந்திய அரசும் ஆஸ்திரேலிய அரசும் இணைந்து, ஆஸ்திரேலிய- இந்திய கல்வித் தகுதி அங்கீகார முறையை இறுதி செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தின் உறுப்பினராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் நீங்கள் பெற்ற பட்டம் ஆஸ்திரேலியாவில் செல்லும். 


ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (மார்ச் 8) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். மார்ச் 11 வரை நான்கு நாள் இந்தியாவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.


பயணத்துக்கு இடையே பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, ''இந்திய அரசும் நாங்களும் இணைந்து, ஆஸ்திரேலிய- இந்திய கல்வித் தகுதி அங்கீகார முறையை இறுதி செய்துள்ளோம். ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம், குஜராத்தின் காந்தி நகர் பகுதியில் சர்வதேச கிளை வளாகத்தைத் தொடங்க உள்ளது.  


இரு தரப்புக்கும் இடையிலான கல்வி சார் உறவுகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசும் நாங்களும் இணைந்து, ஆஸ்திரேலிய- இந்திய கல்வித் தகுதி அங்கீகார முறையை இறுதி செய்துள்ளோம்.


அதாவது நீங்கள் இந்திய மாணவராக இருந்து ஆஸ்திரேலியாவில் படிப்பவராகவோ, படித்து முடித்தவராகவோ இருந்தால், நீங்கள் கஷ்டப்பட்டுப் படித்துப் பெற்ற பட்டம் நாடு திரும்பிய பிறகும் செல்லும். ஆஸ்திரேலியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள இந்திய சமூகத்தின் உறுப்பினராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் நீங்கள் பெற்ற பட்டம் ஆஸ்திரேலியாவில் செல்லும். 


ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை


ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, மைத்ரி என்ற பெயரில் புதிய உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும்'' என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.


6 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்


இது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் அமலுக்கு வந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.  வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்படி (MEA), ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் டான் ஃபாரல் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் மேடலின் கிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும், உயர்மட்ட வணிகக் குழுவும் உடன் வருகை தந்துள்ளனர்.


இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பசுமை எரிசக்தி துறையில் ஒன்றாக இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.