தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை ஒருவர் கொன்று குவித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . 


செல்லப்பிராணிகள் வளர்ப்பது நம் அனைவரின் ஆசையாக இருந்தாலும்,  இருக்கின்ற இடம், காலநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நேரம் அந்த ஆசை நிராசையாகி விடும். அதேசமயம் அந்த செல்லப்பிராணியை வளர்க்க முடியாமல் எங்கேயாவது போய் விட்டு வந்தாலோ அல்லது அது உயிரிழந்தாலோ அதன் உரிமையாளர்களால் தாங்க முடியாத துயரம் ஏற்படும். ஆனால் தென் கொரியாவிலோ ஒருவர் 1000 செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட நாய்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள யாங்பியோங்கில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது சொந்த நாயை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் நாய்களின் சிதைந்த சடலங்கள் தரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பல நாய்களின் உடல்கள் சாக்குப்பைகளில் வைக்கப்பட்டிருப்பதை கண்டார். 


உடனடியாக இதுதொடர்பாக அந்த நபர் போலீசுக்கு புகாரளித்தார். இதன் விசாரணையின் முடிவில் 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நாய்களை பட்டினி போட்டு கொன்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முதியவர் இனப்பெருக்க வயதைக் கடந்த மற்றும் வியாபார ரீதியாக பெரிய விலை போகாத நாய்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து தான் அழிப்பதற்காக பெற்று வந்துள்ளார். இதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் நாய் ஒன்றுக்கு பராமரிப்பு செலவுக்காக மாதம் இந்திய மதிப்பில் ரூ.600 முதல் ரூ.800 பெற்றுக் கொண்டுள்ளார். 


ஆனால் அவற்றையெல்லாம் பட்டினி போட்டு கொன்றுள்ளார். அவரிடம் இருந்து ஆபத்தான நிலையில் சில நாய்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கடுமையான விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் அமலில் உள்ளது. அங்கு வேண்டுமென்றே ஒரு விலங்கிற்கு உணவளிக்கவோ அல்லது தண்ணீர் கொடுக்கவோ தவறி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் வோன் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.