தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு அறிவித்தது. 


2023 வெளியான அறிவிப்பு


இதற்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், பிப்ரவரி வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர். தொடர்ந்து மே மாதம் தேர்வு நடைபெற்றது. அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் Civil Draughtmenship சான்றிதழ் பெற்றிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பித்தனர்.


தேர்வு செய்யப்படும் சாலை ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.19, 500 முதல் ரூ. 71,900 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தது.


காலி இடங்கள் அதிகரிப்பு


இதற்கிடையே 2023 பிப்ரவரி மாத அறிவிக்கையில் 761 இடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2023 ஏப்ரல் மாதத்தில் 64 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. அதேபோல, ஆகஸ்ட் மாதத்தில் 69 இடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டன.


957 ஆக உயர்ந்த காலி இடங்கள் 


இந்த நிலையில் 2024 நவம்பர் 20ஆம் தேதி மேலும் 63 இடங்கள் சேர்க்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/English/Addendum%202D.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம். 


டிஎன்பிஎஸ்சி இணைய தள முகவரி: https://www.tnpsc.gov.in/