2022- 23ஆம் கல்வியாண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  


இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20 சதவீத மாணவர்களைக் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். கலை படிப்புகளில் 20 சதவீத இடங்களும் அறிவியல் படிப்புகளில் ஆய்வக வசதி உள்ள கல்லூரிகளில் 20 சதவீத இடங்களும் அதிகரிக்கப்படுகின்றன. 


அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15 சதவீத அளவுக்கு கூடுதல் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். தனியார் சுயநிதிக் கல்லூரிகள் 10 % அளவுக்கு மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுக் கல்லூரிகளில் தேவை உள்ள பாடப் பிரிவுகளில் 20% வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டன. 


முன்னதாக மாநிலம் முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு, 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்ததை அடுத்து, கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் போட்டி, போட்டனர்.


இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டது. அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.




விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking  மூலம்‌ 
இணையதள வாயிலாகச் செலுத்தினர். இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும்‌ செலுத்தினர். 


அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், 2022- 23ஆம் கல்வியாண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  


இதையும் வாசிக்கலாம்


GATE 2023 Exam: பொறியியல் Gate தேர்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


வகுத்தல் பாடம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியை; ஆட்சியர் செய்த அதிரடி