இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கேளர மாநிலம் கொச்சியில் நடைபெறும் விழாவில், இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தை நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஐ.எம்.எஸ். விக்ராந்த் சிறப்பம்சங்கள்:
கிட்டத்தட்ட ஓராண்டு சோதனை ஓட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 45,000 டன் எடை கொண்ட போர்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் 20,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது.
இந்த விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் மோடி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின் போது, புதிய கடற்படைக் கொடியையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்த புதிய கொடி இந்திய கடல்சார் பாரம்பரியத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் இருக்கும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாகும். இதில் MiG-29K போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1,600 பணியாளர்கள் தங்க முடியும்.
தொடக்கத்தில், MiG போர் விமானங்களும் சில ஹெலிகாப்டர்களும் ஐஎன்எஸ் விக்ராந்தில் நிலைநிறுத்தப்படும். போயிங் மற்றும் டஸ்ஸால்ட் விமானங்கள், 26 போர் கப்பல் தள அடிப்படையிலான விமானங்களை வாங்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது.
தற்போது, ரஷிய தளத்தில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் மட்டுமே இந்தியாவிடம் உள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள இரண்டு முக்கிய கடற்படை முனைகளுக்குத் தலா ஒன்று என்ற அடிப்படையிலும் அதை தவிர கூடுதலாக ஒன்று என பாதுகாப்பு படைகள் மொத்தம் மூன்று விமானம் தாங்கி போர் கப்பலை வாங்க திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தின் விடுதலைக்காக 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்தை நினைவுப்படுத்தும் வகையில் இதற்கும் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமே சொந்த விமானம் தாங்கி கப்பல்களை வடிவமைத்து தயாரித்தது. ஐஎன்எஸ் விக்ராந்தை தயாரித்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இந்திய கடற்படை புதிய போர்க்கப்பலை தனது ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறது. இந்தியா இப்போது தனது கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில் விமானம் தாங்கி கப்பலை நிலைநிறுத்தி அதன் கடல் இருப்பை விரிவுபடுத்த முடியும்.