சர்ச்சைப் பேச்சாளர் மகா விஷ்ணு அரசுப் பள்ளிகளில் பேசிய விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


சென்னை அசோக் நகர், சைதாப் பேட்டை அரசுப் பள்ளிகளில் முந்தைய ஜென்மங்கள், பாவ, புண்ணியங்கள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறப்படும் மகாவிஷ்ணு என்பவர், மாணவிகளிடம் பேசினார். மகா விஷ்ணு அரசுப் பள்ளிகளில்  பேசிய கருத்துக்களும், அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதும், மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது பேச்சும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரமானது, அவரே தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.


5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பு


இதையடுத்து, அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பலரும் புகார் அளித்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாகவே அரசுப் பள்ளிக்கு வந்து பேசியதாக மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்தார்.


செப்.20 வரை நீதிமன்றக் காவல்


விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செப்.20ஆம் தேதி வரை மகா விஷ்ணுவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.


இந்த நிலையில், அசோக் நகர், சைதாப் பேட்டை பள்ளிகளில் மகா விஷ்ணு வந்து பேச முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸே காரணம் என்று தகவல் வெளியானது.


இதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனே நேரில் பள்ளிகளுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கை, தமிழக அரசிடம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.


முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம்


இந்த அறிக்கை அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.


புதிய முதன்மை கல்வி அலுவலர் யார்?


சென்னை மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக ஏஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்குமுன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.