ஐஐடி சென்னையில் உள்ள NCAHT, R2D2 மையங்கள், RRD நிறுவனத்துடன் இணைந்து, ‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ என்ற விளையாட்டுப் போட்டியை நடத்துகின்றன. இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தகவமைப்பு விளையாட்டுப் போட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 24 வரை நடைபெறும் இந்நிகழ்வில் மொத்தம் 100 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணன் என்.கும்மாடி, “மாற்றுத்திறனாளி மாணவர்களை (SwD) ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கிய கல்வி (IE) முயற்சியின் கீழ் பல்வேறு சேவைகளை ஐஐடி சென்னை செயல்படுத்தி வருகிறது. உள்ளடக்கிய கல்விக்கான பிரத்யேக ஆசிரிய ஆலோசகரைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி, கல்வித் தங்குமிடங்கள், தன்னார்வ சேவைகள், அணுகக்கூடிய கற்றல் வளங்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை இக்கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதுதவிர, உள்ளடக்கிய கல்விக்காக நிபுணர்களுடன் இணைந்து செவிப்புலன்- காட்சி- இயக்கத்திற்கான உதவித் தொழில்நுட்பங்களையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. உளவியல் தேவைப்படும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன், பல்வேறு நல்வாழ்வு நடவடிக்கைகளையும் இக்கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
மூன்று முறை நடத்தத் திட்டம்
‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ நிகழ்வுகளை 2024-25ல் மூன்று முறை நடத்தத் திட்டமிடப்பட்டு அதில் முதலாவது நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு நிகழ்வுகள் மூன்றுநாள் விளையாட்டு முகாமாக நடத்தப்படும். முதன்மையாக இயக்கக் குறைபாடுள்ள நபர்களை வெவ்வேறு தகவமைப்பு விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தி பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளில் அமெச்சூர், தொடக்க அனுபவமுள்ள சுமார் 100 பங்கேற்பாளர்கள் பயிற்சியாளர்களைத் தொடர்பு கொள்ளவும், விளையாட்டுகளில் ஈடுபடவும், தகவமைப்பு விளையாட்டுச் சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி நிகழ்வில் அறிவாற்றல், செவித்திறன், பார்வைத்திறன் குறைபாடு உள்ள பரந்த குழுக்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தும் விளையாட்டுத் திருவிழா நடைபெறும். குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளைக் கவனித்துக் கொள்வோருக்கு வேடிக்கை அளிக்கும் நிகழ்வாகவும் இருக்கும்.
நடைபெற உள்ள விளையாட்டு நிகழ்வுகள் பின்வருமாறு:
- சக்கர நாற்காலி கூடைப்பந்து
- சக்கர நாற்காலி பூப்பந்து
- சக்கர நாற்காலி டென்னிஸ்
- சக்கர நாற்காலி கிரிக்கெட்
- சக்கர நாற்காலி பந்தயம்
- டேபிள் டென்னிஸ்
- எறிதல் நிகழ்வுகள் - ஈட்டி, வட்டு, குண்டு எறிதல்
- போசியா