ஐஐடி சென்னை 2023-ம் ஆண்டில் 300 காப்புரிமைகளைப் பெற்று இரட்டிப்பு சாதனை படைத்துள்ளது.


சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2023-ம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்கி சாதனை படைத்துள்ளது. 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் இந்த எண்ணிக்கை 300 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.


அத்துடன், முந்தைய ஆண்டில் 58 சர்வதேச காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் [காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (PCT) கீழ் அனுமதிக்கப்பட்டவை உள்பட] 2023-ல் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து 105-ஐ எட்டியுள்ளது.


நடப்பு நிதியாண்டில் (டிசம்பர் 2023 நிலவரப்படி) 163 இந்தியக் காப்புரிமை, 63 சர்வதேசக் காப்புரிமை விண்ணப்பங்கள் (PCT சேர்த்து) உள்பட 221 காப்புரிமைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.


வெளிநாட்டு காப்புரிமைகள்


இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை இந்தியாவிலும் (1,800), வெளிநாடுகளிலும் (750) மொத்தம் 2,550 அறிவுசார் சொத்து (ஐ.பி.) விண்ணப்பங்கள் (காப்புரிமை உள்பட) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 1,100 விண்ணப்பங்கள் ஐபி-க்கள்/ அனுமதிக்கப்பட்ட காப்புரிமைகள் எனப் பதிவு செய்யப்பட்டவையாகும் (சுமார் 900 இந்தியாவையும், & 200 சர்வதேச நாடுகளையும் சேர்ந்தவை)


ஐஐடி சென்னையில் மொத்த அறிவுசார் சொத்துரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2016-ல் 1,000-ஐயும், 2022-ல் 2,000-ஐயும், 2023-ல் 2,500-ஐயும் கடந்துள்ளது.


வயர்லெஸ் நெட்வொர்க்குகள், நவீனப் பொருட்கள், ரோபாட்டிக்ஸ், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திர முன்னேற்றங்கள், உதவி சாதனங்கள், மேம்பட்ட சென்சார் பயன்பாடுகள், தூய்மையான எரிசக்தி, விண்வெளிப் பயன்பாடுகள், பாலிமர் பொருட்கள் மற்றும் மென்படலம், வினையூக்கிகள், உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள் போன்ற களங்களிலும், வளர்ந்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிவுசார் சொத்துகளை (IP) உருவாக்கியுள்ளனர்.


ஐஐடி சென்னை கண்டுபிடிப்பாளர்கள் கூறுவது என்ன?


ஐஐடி சென்னை வேதியியல் துறையின் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டி.பிரதீப், 100-க்கும் மேற்பட்ட இந்தியக் காப்புரிமை விண்ணப்பங்களையும் (ஜனவரி 2004 முதல்) மற்றும் சுமார் 50 சர்வதேச காப்புரிமை விண்ணப்பங்களையும் (ஜனவரி 2005 முதல்) தாக்கல் செய்திருக்கும் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர். ஒட்டுமொத்தமாக சுமார் 100 மானியங்களைப் பெற்றுள்ளார்.


காப்புரிமை தாக்கல் செய்வதில் கிடைத்துள்ள வெற்றி குறித்து பேசிய பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் பிரதீப் கூறும்போது, “20 ஆண்டுகளுக்கு முன் எனது முதல் காப்புரிமையைத் தாக்கல் செய்தபோது அதற்குரிய வழிமுறைகள் ஏதும் இல்லை. காப்புரிமை வரைவு தாக்கல் செய்தல், தேர்வு அறிக்கைகளுக்கு பதிலளித்தல், வணிகப்படுத்துதல் போன்ற அனைத்தையும் நானே செய்து முடித்தேன்.


காப்புரிமை தாக்கல் மற்றும் வணிகப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வலுவான அமைப்புமுறையை பல ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கியிருக்கிறோம். இந்த அமைப்புமுறையைப் பயன்படுத்தி மூன்றே நாட்களுக்குள் காப்புரிமைக்கு தாக்கல் செய்திருக்கிறேன். வணிகப்படுத்துதலுக்காக சாத்தியமான கூட்டாளர்களை அணுகியுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.