ஐஐடி மெட்ராஸ், ‘‘புத்தொழில் நிறுவனங்கள் குறித்த முக்கிய தகவல்களை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் ‘அனைவருக்கும் ஸ்டார்ட் அப்புகள்’ (Startups for All) முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் சூழல் குறித்த விரிவான தகவல்களை இலவசமாகவும் குறைந்த செலவிலும் அணுகச் செய்வதன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டு ஐஐடி சென்னையின் ‘CREST’ இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
அனைவருக்கும் ஸ்டார்ட்அப்கள்
ஐஐடி சென்னை ஸ்டார்ட்அப்கள் மற்றும் இடர் நிதியுதவி ஆராய்ச்சி மையம் (Centre for Research on Start-ups and Risk Financing - CREST), ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கில் ‘அனைவருக்கும் ஸ்டார்ட்அப்கள்’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் துடிப்பான வேகமாக வளர்ந்துவரும் ஸ்டார்ட்அப் சூழலில் தொடர்புடைய மற்ற தரப்பினரும் இதனால் பயன்பெறுவர்.
ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான YNOS-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இம்முயற்சி, தகவலறிந்த முடிவுகளை எடுக்கக்கூடிய உயர் தரமான, செயல்படக்கூடிய தரவுகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
ஸ்டார்ட்அப் சூழலில் நேரடியாக பங்களிப்பை வழங்கிவரும் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், செயல்படுத்துவோர், வழிகாட்டிகள், பிற பங்குதாரர்கள் உள்ளிட்டோரைத் தவிர, சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் ’அனைவருக்கும் ஸ்டார்ட்அப்கள்’ முயற்சியால் பயனடைவதை இம்முயற்சி உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
யாரெல்லாம் இதில் அடக்கம்?
இதில் மாணவர்கள், வேலைவாய்ப்புத் தேடுவோர், நுகர்வோர், பெருநிறுவனங்கள், பல்வேறு சேவைகளை வழங்குவோர் மற்றும் பலரும் அடங்குவர்.
அண்மையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் மாநாட்டின்’ போது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்.
உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பானது, நாட்டின் ’’விக்சித் பாரத் 2047’’ தொலைநோக்குப் பார்வையையும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கையும் அடைவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் பங்கு தற்போது திருப்புமுனையை எட்டியுள்ளது. நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், செயல்படுத்துவோர் இவர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆர்வமுள்ள விஷயமாக மட்டுமின்றி சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பல்வேறு வழிகளில் தொடர்பு புள்ளிகளாகவும் மாறி வருகின்றனர்.
ஸ்டார்ட் அப் பொருளாதாரம் பிரதான நீரோட்டத்தில் நுழையும்போது, சமூகத்துடன் அதன் ஒருங்கிணைப்பு மேலும் தீவிரமடையும்.
இருப்பினும், தகவல் புதிர் என்பது ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பில் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பரவலான தகவல் கிடைக்கும் உணர்வைத் தருவது போல் இருந்தாலும், உண்மையாக இருக்கும் தகவல்கள் துண்டு துண்டாகவும் சிதறடிக்கப்பட்டும் இருப்பதால் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் முடிவெடுப்பதில் இடையூறு ஏற்படுகிறது.
பிரத்யேக டிஜிட்டல் தளம்
ஸ்டார்ட்- அப்களின் முழு நன்மைகளையும் உணர பொருளாதாரத்திற்கு இந்த தகவல் சவாலைக் குறைப்பது மிக முக்கியமாகும்.
இந்த முக்கிய சவாலை எதிர்கொள்ளும் வகையில், ஐஐடி சென்னையின் CREST, YNOS ஆகியவை இணைந்து ஸ்டார்ட்அப்கள் குறித்த இந்தியாவின் ஒரே பிரத்யேக சுயமான டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளன. ஸ்டார்ட்அப்கள், முதலீட்டாளர்கள், தொழில் ஊக்குவிப்பாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் குறித்த இந்தியாவின் மிகப்பெரிய, மிகவும் விரிவான தரவுத்தளமாக இந்த தகவல் தளம் மாறியுள்ளது.