ஐஐடி சென்னை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க டாஷ்போர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இன்னோவேஷன்-டிஎன்’ இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்று தொடங்கப்படும் முதலாவது தளமாகும். 

Continues below advertisement


ஐஐடி சென்னை இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவில் புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான டாஷ்போர்டை உருவாக்க தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.


இன்னோவேஷன்-டிஎன் (INNOVATION-TN) என்றழைக்கப்படும் இந்த தளம், தமிழ்நாட்டின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதுடன், முதலீட்டாளர்கள், தொழில்நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், புத்தொழில் (Startup) நிறுவனங்கள்  தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கு இங்குள்ள கண்டுபிடிப்புத் திறனை எடுத்துரைக்கின்றன. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் என்பது தொழில் முதலீட்டு ஊக்குவிப்புக்கான தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைப்பு நிறுவனமாகும்.


வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கும். புதிய தயாரிப்புகள்- சேவைகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேவையான கண்டுபிடிப்புகளையும் திறன்களையும் புத்தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


இந்த புத்தாக்க டேஷ்போர்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "தமிழ்நாடு புத்தாக்கத் தளத்தின் துவக்கம், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும் நமது தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் நமது பயணத்தில் முக்கிய படியாக விளங்குகிறது. பெருநகர மையப் பகுதிகளில்  மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வாய்ப்புகள் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, புத்தாக்கம், மேம்பட்ட உற்பத்தி, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் தேசிய அளவில் முதலிடத்தில் தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதற்கான எங்கள் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது" என்றார்.


தொழில்துறை பொருளாதார மாநிலம்


இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில்துறை பொருளாதார மாநிலமான தமிழ்நாடு, நாட்டிலேயே மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகவும் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த மாநிலம் தொடக்க நிறுவனங்களுக்கான முக்கிய மையமாக மாறியிருப்பதுடன், நாட்டிலேயே புத்தாக்கங்களின் மையமாக இம்மாநிலத்தை நிலைநிறுத்தியுள்ளது.


ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில் ஏறத்தாழ 19,000 புத்தொழில் நிறுவனங்கள் (Startups) உள்ளன. இந்த புத்தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 2.2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதுடன் ரூ.1,20,000 கோடிக்கும் அதிகமாக முதலீடுகளை ஈர்த்துள்ளன. 45 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்  தலா ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன. மாநிலத்தில் 228 செயல்பாட்டில் உள்ள தொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன, இது நாட்டின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.


தமிழ்நாட்டில் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு டேஷ்போர்டு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, "கொள்கை வகுப்பாளர்கள் வெவ்வேறு மாவட்டங்களின் துறை சார்ந்த பலங்களில் கவனம் செலுத்தவும் பொருத்தமான கொள்கைக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கவும் இந்த டேஷ்போர்டு உதவும். தேசிய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு புத்தொழில் நிறுவனங்களின் தொகுப்பையும் டேஷ்போர்டு காட்சிப்படுத்துகிறது, இதன் மூலம் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும், அனுபவம் வாய்ந்த மற்றும் தொழில் சார்ந்த முதலீட்டாளர்களிடமிருந்தும் முதலீடுகளை ஈர்க்க முடியும்" என்றார்.


ஐஐடி மெட்ராஸில் உள்ள தனிச்சிறப்பு ஆராய்ச்சி மையமான புத்தொழில் மற்றும் இடர் நிதியுதவி மையத்துடன் (Centre for Research on Startups and Risk Financing -CREST) ஆராய்ச்சி மையத்தால், ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு புத்தொழில் நிறுவனமான YNOS வென்ச்சர் எஞ்சினுடன் (YNOS Venture Engine) இணைந்து, CREST உருவாக்கிய மிகவும் விரிவான புத்தொழில் மற்றும் முதலீட்டாளர் தளத்தைப் பயன்படுத்தி, INNOVATION-TN என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது.


INNOVATION-TN டேஷ்போர்டை உருவாக்குவதற்காக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், ஐஐடி மெட்ராஸ், YNOS இடையே ஜூலை 23, 2025 அன்று சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புத்தாக்க டாஷ்போர்டின் வலிமை, நம்பகத்தன்மை, பொருத்தத்தை உறுதி செய்வதற்காக கல்வி மேற்பார்வை மற்றும் ஆராய்ச்சி உள்ளீடுகளை ஐஐடி மெட்ராஸ் வழங்கும்.


தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையே நீண்டகால உத்திசார் ஈடுபாட்டை ஊக்குவிப்பதுடன் மாநிலத்தின் புத்தாக்க முன்னுரிமைகளுடன் நிறுவன ஆதரவு, தெரிவுநிலை, சீரமைப்பு ஆகியவற்றை வழங்கும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.