தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் களம் காண்கிறது. இதுவரை 2 மாநாடுகளை பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் தொடங்க உள்ளது. வரும் 13-ம் தேதி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.
இதற்காக ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டும், பாதுகாப்பு கேட்டும் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். முன்னதாக திருச்சி விமான நிலையம் அருகே கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதான் முதல் குடைச்சல் என்று தவெக தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசாரின் செயல்பாடுகளுக்கு கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக அரசு இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும், ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும், மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. தேர்தல் பிரசார பயணம் என்பது, அனைத்துக்கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப் பூர்வமான பிரதான நடவடிக்கைதான்.
மற்ற கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்.இந்த வெற்று விளம்பர மாடல் அரசு தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. இதனால் காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவு வெளியான பின்னர் தவெகவின் பிரசார பயணத்திற்கு போலீசார் இன்னும் நெருக்கடியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக கட்சியினர் கேட்ட இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாம். இதனால் வரும் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய், புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். முதலில் டி.வி.எஸ் டோல்கேட் தொடங்கி தலைமை தபால் நிலையம், பாரதியார் சாலை, மரக்கடை வழியாக சத்திரம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது பிரசார பயண பாதையை மாற்றி உள்ள விஜய், டி.வி.எஸ். டோல்கேட்டில் பிரசாரத்தை தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பேச உள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விஜய் அரியலூர் செல்கிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக போலீசார் விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளதாம். ஸ்டார் தியேட்டர், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பார்க்கிங் அமைக்க த.வெ.க. ஒப்புக்கொண்டுள்ளதாம்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், சட்டப்படி என்ன செய்யணும் என்று சொன்னார்களோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் சந்திப்பு பயணம் எந்த விதத்திலும் தடைப்படாது. போலீசார் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அதை சமாளிப்போம். எங்கள் தலைவரின் மக்கள் சந்திப்பு வெற்றிக்கரமாக நடக்கும் என்றனர்.