ஐஐடி சென்னையால் உருவாக்கப்பட்ட திடக் கழிவு எரிப்பான் (Solid Waste Combustor) தமிழ்நாட்டில் உள்ள பெல்
(BHEL) தொழிற்சாலையில் இயங்கத் தொடங்கியுள்ளது.


இந்தியாவில் உற்பத்தியாகும் பிரிக்கப்படாத நகராண்மை திடக்கழிவுகளை (Municipal Solid Waste) திறம்பட எரிப்பதற்காக, உள்நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள சுழல் உலை (Rotary Furnace) அடிப்படையிலான சோதனை ஆலையை சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் காமகோடி இன்று தொடங்கி வைத்தார்.


சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ள உள்நாட்டுத் தயாரிப்பான நகராண்மை திடக்கழிவு எரிப்பான் சோதனை ஆலை, தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள BHEL தொழிற்சாலையில் இயங்க உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பிரிக்கப்படாத நகராண்மை திடக்கழிவுகளை திறம்படப் பதப்படுத்துவதற்காக, முதன்முறையாக சுழல் உலை தொழில்நுட்பத்தில் (Rotary Furnace Technology) இந்த எரிப்பான் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.


ஒரு டன் வரை கழிவைப் பதப்படுத்தலாம்


முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு ஒரு டன் வரை பிரிக்கப்படாத நகராண்மைக் கழிவுகளைப் (MSW)பதப்படுத்த முடியும். நீராவியை உற்பத்தி செய்வது இதன் முதல் பணியாக இருந்தாலும், சுத்தமான வாயு உமிழ்வு, சாம்பல் ஆகியவை துணைத் தயாரிப்புகளாக வெளியேறும். இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தால் பெல் நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் உச்சத்தர்
அவிஷ்கார் யோஜனா (UAY) திட்டத்தில் இது ஒரு பகுதியாகும். 




சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் எரித்தல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான தேசிய மையத்தில் ( National Centre for Combustion Research and Development (NCCRD) இது உருவாக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தில் இந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.


இதுகுறித்துப் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், ’’கழிவு மேலாண்மை என்பது முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. விரைவாகவும், பாதுகாப்பாகவும் கழிவுகளை அகற்ற உதவும் வகையில் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது. சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன திடக்கழிவு எரிப்பு சாதனம், அளவிடுதல் மற்றும் பாதுகாப்பான அகற்றல் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, கழிவை எரிபொருளாக மாற்றித்தரும் வகையில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது’’ என்று தெரிவித்தார்.


திடக்கழிவு பிரச்சினை


இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 133 மில்லியன் டன் அளவுக்கு நகராண்மை திடக்கழிவு உற்பத்தியாகிறது. இதில் 85 விழுக்காடுக்கும் மேலாக குப்பைக் கிடங்குகளில்தான் குவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்  சராசரியாக நாள் ஒன்றுக்கு 14,600 டன்களும், சென்னையில் நாள் ஒன்றுக்கு 5,400 டன்களும் திடக்கழிவு உற்பத்தியாகின்றன (TNPCB, 2021). ஒவ்வொரு ஆண்டும் நகராண்மை திடக்கழிவு உற்பத்தி 1.3 விழுக்காடு அதிகரிப்பதுடன், தனிநபர் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 0.5-1 கிலோ என்ற அளவில் இருந்து வருகிறது.


உரமாக்குதல், மண்புழு உரம் தயாரித்தல், உயிரி வாயு (biogas) உருவாக்கம் ஆகியவற்றுக்காக உயிரி-கரிமக் கழிவுகளைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்திய பின்னர், பிளாஸ்டிக், அதிக கலோரி கொண்ட பொருட்கள் என நாள் ஒன்றுக்கு 2,500 டன் உயிரி-கனிமக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மைத் தொழிலின் மதிப்பு 2025ம் ஆண்டுவாக்கில் 13.62 பில்லியன்
டாலர்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.