ஐஐடி சென்னை, 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பிடெக்/ இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75 சதவீதத்துக்கும் அதிகமான முதுகலை மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்துள்ளது.


ஜப்பான், ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளையும், 85 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ள நிலையில், சராசரி மற்றும் ஒப்பீடு அளவிலான சம்பளம் கடந்த ஆண்டுகளைப் போன்றே காணப்படுகிறது.


ஐஐடி சென்னை பிடெக் மற்றும் இரட்டைப் பட்டதாரிகள் தங்களுக்கு பட்டமளிப்பு நடைபெறும் சமயத்திலேயே தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2024 பட்டமளிப்பு விழாவிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நடப்பாண்டிலும் ஐஐடி மெட்ராஸ் இந்த சாதனையைப் படைக்க உள்ளது.


256 நிறுவனங்களில் 1,091 பேருக்கு பணி


2024 ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, ஐஐடி சென்னையில் 80%-க்கும் மேற்பட்ட பிடெக்/ இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75%க்கும் அதிகமான முதுகலை மாணவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின்போது 256 நிறுவனங்களில் 1,091 பேர் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர, மொத்தமுள்ள 300 முன்வேலைவாய்ப்பு பணிகளுக்கு 235 பேர் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.


முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின்போது ஜப்பான், ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளையும், 85 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. இவ்வாறு பணியமர்த்தப்பட்ட 43% பேர் முக்கிய துறைகளிலும், 20% பேர் மென்பொருள் துறையிலும், 10%க்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு/ நிதி/ ஆலோசனை மற்றும் தரவு அறிவியல் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.


பட்டமளிப்பு முடிவடைந்த சில மாதங்களிலேயே வேலை


பிஎச்டி ஆராய்ச்சியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொண்டால், பிஎச்டி என்பது வழக்கமான பாடநெறி அடிப்படையிலான படிப்பு அல்ல, அதற்கென குறிப்பிட்ட காலஅளவும் கிடையாது. எனவே அவர்களின் வேலைவாய்ப்புக்கான கால அளவு பாடநெறி அடிப்படையிலான பாடத்திட்டத்திற்கு பொருந்தாது. பிஎச்டி மாணவர்கள் பலரும் தங்களின் பிஎச்டி ஆய்வறிக்கையை பட்டமளிப்புக்கு நெருக்கத்தில் நிறைவு செய்கிறார்கள். அவர்களில் பலருக்கு பட்டமளிப்பு முடிவடைந்த சில மாதங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது.


பெரும்பாலான பிஎச்டி மாணவர்கள் ஆராய்ச்சியை மேலும் தொடர்வதையோ அல்லது ஆசிரியர் பணியையோ தேர்வு செய்கின்றனர். இதுதவிர, முக்கிய துறைகள் சிலவற்றில் நிபுணத்துவம் பெற்ற பிஎச்டி பட்டதாரிகளுக்கு, தொடர்புடைய குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வேலைவாய்ப்பும் அமைகிறது. இப்பிரச்சனையை முறையாகக் கையாளும் விதமாக, வரும் கல்வியாண்டு முதல் ‘ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவு’ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்


நடப்பாண்டில் ஒப்பீடு அளவிலான சம்பளம் (median) ரூ.19.6 லட்சமாகவும் சராசரி ஊதியம் (average salary) ரூ.22 லட்சமாகவும் உள்ளது.


வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “வேலைவாய்ப்புகளில் கடந்த ஆண்டின் போக்கே நடப்பாண்டிலும் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே ஐஐடி மெட்ராஸில் படிக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைப் பாதை பற்றி எந்தப் பெற்றோரும் கவலைப்படத் தேவையில்லை. வேலைவாய்ப்பு என்பது முக்கிய வாழ்க்கைப் பாதையாக இருந்தாலும், எங்களின் மாணவர்களில் அதிகமானோர் தொழில்முனைவைத் தேர்வு செய்து மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதையே விரும்புகிறோம். அடுத்த ஆண்டில் 100 டெக் ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதை நாங்கள் இலக்காக நிர்ணயித்து இதனை செயல்படுத்த உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.