ஐஐடி மும்பையில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து கல்லூரிக்காக 57 கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்துள்ளனர். 1998ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள், தாங்கள் படித்து முடித்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1971ஆம் ஆண்டு மாணவர்கள் 50ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, 2022-ல் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி இருந்தனர். குறிப்பாக அப்போது 41 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி ஐஐடி மும்பையில் முன்னாள் மாணவர்கள் தினம் (Alumni Day) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு 57 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
எதற்கு இந்த நிதி?
இந்தத் தொகை பாடங்கள் சார்ர்ந்த செயல்திட்டங்களுக்கும் ஆய்வு நோக்கிலும் மாணவர்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று ஐஐடி மும்பை தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீடித்த சூழலியல் சார்ந்த விடுதிகளை அமைக்கும் Project Evergreen திட்டத்துக்கும் புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் ஆய்வகங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே, மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
யார் அளித்த நிதி?
ஐஐடி மும்பை முன்னாள் மாணவர்கள் சுமார் 200 பேர் இணைந்து இந்தத் தொகையை வழங்கி உள்ளனர். குறிப்பாக தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக்கின் நிர்வாக இயக்குநர் அபூர்வ் சக்சேனா, பீக் XV-ன் நிர்வாக இயக்குநர் ஷைலேந்திர சிங், வெக்டர் கேபிட்டலின் நிர்வாக இயக்குநர் அனுபம் பானர்ஜி, கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த திலீப் ஜார்ஜ், கிரேட் லேர்னிங் நிறுவனத்தின் சிஇஓ மோகன் லகாம்ராஜூ, Coloplast நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மனு வர்மா, சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தொழில் முனைவர் சுந்தர் ஐயர், Indovance நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ சந்தீப் ஜோஷி மற்றும் HCL நிறுவனத்தின் அமெரிக்காவின் தலைமை வளர்ச்சி அதிகாரி ஸ்ரீகாந்த் ஷெட்டி உள்ளிட்ட நபர்கள் இணைந்து 57 கோடி ரூபாயை வழங்கி உள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Annual Planner 2024: ஜூனில் குரூப் 4 தேர்வு- ஆகஸ்ட்டில் குரூப் 2, ஜூலையில் குரூப் 1 தேர்வுகள்- டிஎன்பிஎஸ்சி முழு அட்டவணை இதோ!