10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், நாளை (டிசம்பர் 27ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். தத்கல் முறையில் விண்ணப்பிக்கவும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:


நடைபெறவுள்ள மார்ச்‌ / ஏப்ரல்‌ 2024, பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


ஏற்கனவே நேரடித்‌ தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்‌ தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதுவதற்கும்‌, முதலாம்‌ ஆண்டு (+1) தேர்வில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுதுவதற்கும்‌ சேர்த்து விண்ணப்பிக்கலாம்‌.


விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்‌


மார்ச்‌ / ஏப்ரல்‌ 2024, பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தனித்‌ தேர்வர்கள்‌, 27.12.2023 ( புதன்‌ கிழமை) முதல்‌ 10.01.2024 ( புதன்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ ( 31.12.2023 (ஞாயிற்றுக்‌ கிழமை) 01.01.2024 ( திங்கட்‌ கிழமை) மற்றும்‌ 07.01.2024 (ஞாயிற்றுக்‌ கிழமை) நீங்கலாக )  விண்ணப்பிக்கலாம்.









தத்கல்‌ (சிறப்பு அனுமதி) முறையில்‌ விண்ணப்பிப்பதற்கான நாட்கள்‌


மேற்கண்ட‌ தேதிகளில்‌ விண்ணப்பிக்கத்‌ தவறுபவர்கள்‌ 11.01.2024 (வியாழக்‌ கிழமை) மற்றும்‌ 12.01.2024 (வள்ளிக்‌ கிழமை) இரு நாட்களில்‌ தேர்வுக்‌ கட்டணத்துடன்‌ கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம்‌ வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல்‌ முறையில்‌ விண்ணப்பித்துக்‌ கொள்ளலாம்‌.



அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்கள்‌ மற்றும்‌ தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்‌


மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களின்‌ (Government Examinations Service centres) விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்களை பதிவு செய்தல்‌ குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ அறிவுரைகள்‌ ஆகியவற்றை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌.


மேலும்‌, இவ்விவரங்களை அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலகங்கள்‌, சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலகங்கள்‌ மற்றும் அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்களிலும்‌ அறிந்துகொள்ளலாம்‌.


தொழிற்பயிற்சி (ஐடிஐ) பயின்ற மாணவர்கள்‌


எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி மாணவர்கள்‌ பத்தாம்‌ வகுப்பு தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடத்‌ தேர்வுகளுக்கும்‌, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி மாணவர்கள்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (+1) மற்றும்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டுக்கான தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடத்‌ தேர்வுகளுக்கும்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களின் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கலாம்‌  என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது..


கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in