தலை சிறந்த வணிகப் பள்ளிகளுக்கான 2024ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியலை, இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (IIRF) வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 300 மேலாண்மைக் கல்லூரிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியாவில், 2900-க்கும் மேற்பட்ட தனியார் எம்பிஏ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளான கேட், ஜிமேட் ஆகிய தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கைகளை நடத்தி வருகின்றன.  


மேலாண்மைக் கல்விக்குப் புகழ்பெற்ற கல்லூரிகள் ஐஐஎம். 20 கல்லூரிகளைக் கொண்ட ஐஐஎம்களில், ஐஐஎம் அகமதாபாத், ஐஐஎம் பெங்களூரு, ஐஐஎம் கொல்கத்தா, ஐஐஎம் இந்தூர் மற்றும் ஐஐஎம் லக்னோ ஆகியவை புகழ்பெற்றவை.


எந்த அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்?


* அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் ஒட்டுமொத்தப் பட்டியல்,


* பல்கலைக்கழகத் திட்டத்தின்கீழ் தலைசிறந்த 50 வணிகக் கல்லூரிகள்


* ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் தலைசிறந்த 50 வணிகக் கல்லூரிகள்


* வேலைவாய்ப்புக்கான தலைசிறந்த 50 வணிகக் கல்லூரிகள் (Eminence for Employability)


* வளர்ந்து வரும் சிறந்த 20 வணிகக் கல்லூரிகள்


ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.


என்னென்ன காரணிகள்?


அதேபோல வேலை வாய்ப்பு திறன், கற்பித்தல், கற்றல் வளங்கள் மற்றும் கற்பித்தல், ஆராய்ச்சி, தொழில்துறை வருமானம் மற்றும் ஒருங்கிணைப்பு, வேலை வாய்ப்பு உத்தி மற்றும் ஆதரவு, எதிர்கால நோக்குநிலை மற்றும் வெளிப்புற பார்வை மற்றும் சர்வதேச பார்வை (EPIO) ஆகியவை மதிப்பீடுகளாக முக்கியக் காரணிகளாக உள்ளன.


முதல் 5 இடங்கள் யாருக்கு?


இந்தப் பட்டியலில் ஐஐஎம் அகமதாபாத், தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. இதன் வேலைவாய்ப்பு வழங்கும் திறன் (Placement Performance) 139.28 ஆக உள்ளது. அதேபோல ஆராய்ச்சிக்கான புள்ளிகள் 124.28 ஆகவும் வேலை வாய்ப்பு உத்தி மற்றும் ஆதரவு (Placement Strategy & Support) புள்ளிகள் 134.42 ஆகவும் உள்ளன.


இந்த பட்டியலில், எஃப்எம்எஸ் எனப்படும் மேலாண்மைப் படிப்புகளுக்கான மையம் (Faculty of Management Studies) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்த மையம் அமைந்துள்ளது.


 தொடர்ந்து ஐஐஎம் கொல்கத்தா மூன்றாம் இடத்தையும் ஐஐஎம் பெங்களூரு 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல ஐஐஎம் கோழிக்கோடு 5ஆவது இடத்தில் உள்ளது. 


முழுப் பட்டியலையும் காண: https://iirfranking.com/ranking/top-mba-colleges-in-india-2024


கூடுதல் தகவல்களுக்கு: https://iirfranking.com/