ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசு வெற்றிபெற்றுள்ளது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் அரசுக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய கூட்டணி அரசுக்கு எதிராக 29  பேர் வாக்களித்துள்ளனர்.


ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு:


பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்க்கண்டில் முதலமைச்சராக பதவி வகித்த வந்த ஹேமந்த் சோரன் கைதாகும் சூழல் உருவானதை தொடர்ந்து, தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜனவரி 31ஆம் தேதி இரவு, நில மோசடி வழக்கில் சிக்கிய அவர் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.


இதையடுத்து, புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தபோதிலும், முதலமைச்சராக அவர் பதவியேற்பதில் தொடர் இழுபறி நீடித்தது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுக்கவில்லை என ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியது.


பெரும் சர்ச்சையை தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார். அதை தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசு வெற்றிபெற்றுள்ளது.


பாஜகவை கதறவிட்ட ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா:


சம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 உறுப்பினர்களும் எதிராக 29  பேர் வாக்களித்தனர். கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றார்.


நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய சம்பாய் சோரன், "ஹேமந்த் சோரனுக்கு எப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்பதை இன்று நாடே பார்க்கிறது. நீங்கள் எந்த கிராமத்திற்குச் சென்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் ஹேமந்த் சோரனின் திட்டங்களைக் காணலாம். நான் ஹேமந்த் சோரனின் இரண்டாம் பாகம் என்று பெருமையுடன் சொல்கிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய ஹேமந்த் சோரன், "ஜனவரி 31ஆம் தேதி இரவு, நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தில் ராஜ்பவனுக்கும் (ஆளுநர் மாளிகை) தொடர்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.


இந்த நாள் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும். ஜார்கண்டில் ஆளும் கூட்டணிக்கும் சாம்பாய் சோரனுக்கு முழு ஆதரவு உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன். 8.3 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர், நான் என்பதற்கான பதிவேடுகளைக் காட்டினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன். 


உங்களுக்கு (பாஜக) தைரியம் இருந்தால் அதை நிரூபியுங்கள். நாங்கள் இன்னும் தோல்வியை ஏற்கவில்லை. என்னை சிறையில் அடைத்து வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தங்கள் உரிமைகளுக்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்த மாநிலம் ஜார்கண்ட்.


நான் கண்ணீர் விடமாட்டேன். ஆனால், நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன். அரசியலில் இருந்து விலகுவதை விடுங்கள், 8 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர், நான் என்பதற்கான பதிவேடுகளுடன் சட்டப்பேரவைக்கு பாஜக வந்தால் நான் ஜார்கண்டிலிருந்து வெளியேறுவேன்" என்றார்.