மத்திய அரசு நடத்தி வரும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காரணமாக பல ஏழை, நடுத்தர மாணவர்கள், அரசுப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக கூறி அதற்கு விலக்கு வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் நீட் தேர்வு தமிழ்நாட்டிலிருந்து விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து உள்ளது.


இருப்பினும் இந்த ஆண்டும் 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரம் அதை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும், தற்கொலை எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில், இந்திய வனத்துறை அதிகாரியான சுதா ராமன் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவு வைரலாகி வருகிறது.  ”எனக்கு மருத்துவராகும் கனவு இருந்தது. ஆனால் BE Biomedical தான் கிடைத்தது. பின் 21 வயதில் திருமணம். விப்ரோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 2 வருடம் கழித்து வேலையை விட்டுவிட்டு பல தடைகளை தாண்டி 2 முறை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி தோற்றேன். பின்னர் 1 வயது குழந்தையை விட்டுவிட்டு குடிமைப்பணி தேர்வு எழுத சென்னை வந்தேன். எனக்கு முதல் முயற்சியிலேயே வனத்துறை அதிகாரியாக பணி கிடைத்தது.


2012 ஆண்டில் மட்டும் மட்டும் 6 வெவ்வேறு அரசு பணி தேர்வுகளை எழுதினேன். எந்த ஒரு தேர்வுக்கும் அறிவியல் படித்தது கிடையாது. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு படித்த இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் நன்கு நினைவில் உள்ளது. இன்று வரை பல இடங்களில் அறிவியல் வகுப்புகளை எடுத்து வருகிறேன். தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த ஒரு தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் நிச்சயம் வெற்றி பெறவும் முடியும். மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல. மாணவர்களிடம் இதை அழுத்தமாக சொல்லுங்கள்.” என குறிப்பிட்டு உள்ளார்.


இதற்கு பதிலளித்த லண்டன் NHS இல் பணிபுரிந்து வரும், ஆடிட்டர் ஒருவர், “1996 ஆம் ஆண்டு பி்.காம் முடித்ததும் IIM அகமதாபாத்தில் சேர விரும்பினேன் . ஆனால் நுழைவுத் தேர்வில் தோற்றேன். பின் MComல் சேர்ந்தேன். கூடவே CA. ஆனால் கோச்சிங் போகாமல் முதல் முயற்சியில் தேறினேன். அதன்பின் LLB & CS முடித்து பல வருடம் கஸ்டம்ஸ் எக்சைஸ் கேஸ்களை கவனித்துவிட்டு தற்போது லண்டனில் NHSல் பணியில் உள்ளேன். ஆரம்ப கால IIM entrance தோல்வியை மட்டும் நினைத்திருந்தால் ஒன்றையும் சாதித்திருக்க முடியாது.”என நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்து வருகிறார்