கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சர்ச்சை நாயகன் என அறியப்பட்டாலும் தனக்கென தனித்துவமான ஃபேன் பாலோவர்ஸை கொண்டவர் . ஒரு நடிகன் நடிக்கும் வரையில்தான் ரசிகர்கள் மன்றங்கள் உச்சத்தில் இருக்கும், ஆனால் சிலம்பரசனுக்கு நடிக்க அனுமதி மறுக்கப்பட்டு ரெட் கார்ட் கொடுத்தபோதிலும் STR தான் எப்போதுமே என்ற வெறித்தனமான ரசிகர்கள் அவரை சுற்றியே சமூக வலைத்தளங்களில் வட்டமடித்துக்கொண்டிருந்தனர்.
அதனை பல மேடைகளில் சிம்புவே பகிர்ந்துள்ளார். ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு சிலம்பரசன் STR என்ற பெயரில் மீண்டும் சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கி மிரட்டி வருகிறார். தற்போது சிம்பு இடும் அனைத்து பதிவுகளும் டால் ஆஃப் தி டவுன். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி-ஷ்ர்ட்டை அணிந்து , ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்தவாரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த டி-ஷர்ட்டில் ’STR 6' என எழுதப்பட்டிருந்தது. மேலும் “ CSK Vs STR ஏதாவது யூகிக்க முடியுதா? தயாராகுங்கள் சர்ப்ரைஸ் காத்திருக்கு. என ஒரு அறிவிப்பை வெளியிட, நிச்சயம் CSK ரசிகர்களுக்கான ஆல்பம் பாடல்தான் என பலரும் கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.
ஆனால் கூடுதல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சிம்புவின் 48 பட டைட்டிலை "கொரோனா குமார்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழு. மேலும் சிம்பு குறிப்பிட்டது போலவே CSK ரசிகர்களுக்கான ஆல்பம் பாடலும் கொரோனா குமார் படக்குழு சார்பாக வெளியிடப்படும் என அந்த வீடியோவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா குமார் படத்தை , ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதில் ‘குமுதா, குமுதா ‘ என விஜய் சேதுபதி காதல் மழையை பொழியும் காட்சிகள் செம ஹிட். அந்த கதாபாத்திரத்தின் நீட்சிதான் இந்த கொரோனா குமாரும். இதிலும் ‘குமுதா’ என்னும் டயலாக் நிச்சயம் இடம்பெறும் என தெரிகிறது.அதனை விளக்கும் விதமாகத்தான் இந்த அறிவிப்பின் தொடக்கத்தில் ‘ அன்பே குமுதா, அழகே குமுதா, அறிவே குமுதா ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு அக்மார்க் சென்னை பையனாக வலம் வர உள்ளாராம். குறிப்பாக அவரும் ஒரு csk ஃபேனாம். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.