சிஐஎஸ்சிஇ வாரியம் சார்பில், ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.30) வெளியாகி உள்ளன. மாணவர்கள் cisce.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) மற்றும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் (ISC) ஆகியவற்றின்கீழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வு தேதிகளிலேயே பெரும்பாலும் இந்தத் தேர்வுகளும் இருக்கும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது எப்படி?
ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி தேர்வுகள் முடிவு பெற்றன. ஐஎஸ்சி 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 30) வெளியாகி உள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- மாணவர்கள் https://tmgr-98fkj2l4xmvz7q2wa9pl.trafficmanager.net/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் UID, Index No மற்றும் Captcha ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.
- அதேபோல தேவைப்பட்டால், தேர்வு முடிவுகளை பிரிண்ட் செய்தும் வைத்துக்கொள்ளலாம்.
வேறு எப்படிக் காணலாம்?
தேர்வு முடிவுகளைக் காணும்போதுஅதிக வலைத்தள போக்குவரத்து ஏற்பட்டால், மாணவர்கள் தங்கள் ICSE மதிப்பெண்களை DigiLocker செயலி வழியாகவும் சரிபார்க்கலாம். 'CISCE' பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, முடிவுகள் தானாகவே கிடைக்கும்.
மறு மதிப்பீடு
அதேபோல, தேர்வு மறு சரிபார்ப்புகளுக்கான விண்ணப்ப சாளரத்தையும் CISCE அறிவித்து உள்ளது. தங்கள் விடைத்தாள்களின் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மே 4, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கென ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.
மேம்பாட்டுத் தேர்வு
தங்கள் செயல்திறனை மேம்படுத்த விரும்பும் மாணவர்களுவோருக்கு, ஜூலை மாதம் மேம்பாட்டுத் தேர்வுகளை CISCE நடத்தும். அதற்கான கால அட்டவணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு எப்படி?
2024ஆம் ஆண்டு CISCE வாரியத்தின் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 3.43 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 10ஆம் வகுப்பு தேர்வை 1,30,506 மாணவர்கள், 1,13,111 மாணவிகள் எழுதினர். தேர்வு எழுதியோரில் 1,29,612 மாணவர்கள் மற்றும் 1,12,716 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்பில் 47,136 மாணவிகளும் 52,765 மாணவர்களும் தேர்வை எழுதினர். அதில், 46,626 மாணவிகள் மற்றும் 51,462 மாணவர்கள் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.