காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று பொறுப்பேற்று கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகரம் ஆன்மீக பூமியாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதேபோன்று காஞ்சிபுரம் மாநகரத்தில் பல்வேறு, மடங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் சங்கர மடம் (Kanchipuram Sankara Mutt ), உலக அளவில் பிரசித்தி பெற்ற மடமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில், பீடாதிபதி சங்கராச்சாரியார் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
சங்கர மடத்தின் வரலாறு என்ன ?
காஞ்சிபுரம் சங்கர மடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அலுவல்முறை வரலாற்றின் படி, காஞ்சிபுரம் சங்கரமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. காஞ்சிபுரம் சங்கரமடம் என்பது இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மடம் என்பதால், இது நடக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக (சங்கராச்சாரியா) ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ( sri Vijendra Saraswathi swamigal ) செயல்பட்டு வருகிறார். இவர் தனது 14 வயதில் 69 ஆவது ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளால், எழுபதாவது இளைய மடாதிபதியாக பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
71-வது இளையமடாதிபதி நியமனம்
ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு மடத்தின் தற்போதைய 70 வது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்க தீர்த்த திருக்குளத்தில் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.
கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். இளையமடாதிபதிக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய மடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் மடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 வது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
காமாட்சி அம்மன் கோவிலில் விழாக்கோலம்
விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவில் வளாகமும் சங்கர மடமும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் யார் ?
இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள உள்ள கணேஷ் சர்மா டிராவிட் ரிக், யஜூர் , சாம வேதங்களை பயின்றவர். சிறுவயதில் இருந்து வேதங்கள் மீது அதிக ஈடுபாடுகளைக் கொண்டவராக இருந்து வந்துள்ளார். மடத்தில் ஆரம்பம் முதலே, கடவுள் மீதும் வேதங்கள் மீதும் அதிக பற்று கொண்ட இவர் தொடர்ந்து வேதங்களை ஆர்வமுடன் கற்றுக் கொண்டு வந்துள்ளார்.
அதேபோன்று சங்கராச்சாரியாராக நியமனம் செய்யப்படுவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருந்ததாகவும், பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தாய், தந்தை மற்றும் ஒரு தங்கை உள்ளனர். தற்போது இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டு இருப்பதால், அனைத்து உறவுகளையும் துறந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் காரணம் என்ன ?
சத்தியத்தை அதாவது, விரதத்தை உண்மையாக மேற்கொண்டு. பேருக்காகவும் புகழுக்காகவும், மேற்கொள்ளாமல் ஆத்மா ஆத்மமாக சத்தியவிரதத்தை மேற்கொண்டு, மூன்று வேதங்களையும் அத்வேதியம் செய்து, எந்த வேதத்தை காப்பாற்ற வேண்டும். எந்த வேதத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் வழி செய்து கொடுத்துள்ளார்கள், அதைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பெயர் வைத்து அவருக்கு ஆசீர்வாதம் செய்தார்.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி ,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி, டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.