சித்திரை திருவிழா முதல் நாளில்  கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் மாசி வீதிகளில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் - வழிநெடுகிலும் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் - மாசி வீதிகளில் நிரம்பிவழிந்த பக்தர்கள் கூட்டம்.
 
மீனாட்சியம்மன் கோயில்
 
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்
 
சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா
 
சித்திரைத் திருவிழா தொடங்கி 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் போது நாள்தோறும் காலை மற்றும் மாலைகளில் நான்கு மாசி வீதிகளில் கற்பக விருட்சம்  சிம்ம வாகனம், பூத அன்னவாகனம், கைலாசபர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு , தங்க குதிரை, ரிஷப வாகனம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறும்.
 
சித்திரைத் திருவிழா 2025
 
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து விழாவின் முதல் நாள் நிகழ்வாக மாலை மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன் கற்பக விருட்ச வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமியும் அம்மனும் வீதி  உலா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர்.
 
இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்
 
சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.