இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் ஐ.சி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனவால் இக்கட்டான சூழல் நிலவுவதால் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ICSE யின் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லுரி தேர்வுகள் தொடர்ந்து தடைபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 8,000க்கும் அதிகமாக உள்ளது. இதனையடுத்து திட்டமிட்டப்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்தது. முன்னதாக, இந்த கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு நாளுக்கு மாற்றம் செய்ய  வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது. 




இதனிடையே தமிழகத்தில் திட்டமிட்டப்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அப்போது கூறியதுகுறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அப்போது அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "  2020-21 கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது. எனவே, மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31-ம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக் கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடை பெறும் என்று கூறப்பட்டிருந்தது. 


மேலும் தேர்வுகள் நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய விரிவான நிலை வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிகமாக இருப்பதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு உள்பட 12ம் வகுப்பு தேர்வுகளையும் தள்ளிவைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் முன்பே அட்டவணையிட்டபடி 12 வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல கொரோனா அபாயங்களை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  ஒத்திவைக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.


கடந்த ஓராண்டிற்கு மேலாக பள்ளி செல்லவேண்டிய மாணவ மாணவிகள் கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.