கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கொரோனா சோதனைகளை முதலில் நிறுத்துங்கள், கொரோனா என்று ஒன்று இல்லை,  நீங்க கொரோனா டெஸ்ட நிறுத்துனா அடுத்த நிமிடம் இந்த கொரோனா இங்க இருக்காது. நான் தொண்டாமுத்தூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது தெருவில் நாயுடன் கூட படுத்துக்கிடந்தேன், பிச்சைகாரன் வைத்திருந்த சோற்றை வாங்கித் தின்றேன், தரையில குப்பையில படுத்துக்கிடந்தேன் எனக்கு கொரோனா வந்துவிட்டதா ? என பேட்டி அளித்திருந்த மன்சூர் அலிக்கான், நாட்டு மக்கள் எல்லாம் என்ன ஆட்டு மந்தைகளா ? உங்க இஷ்டத்துக்கு ஊசி போடுவீங்களா ? தடுப்பூசியை ஏன் கட்டாயப்படுத்தி போடுறீங்க ? அதுல என்ன கண்டண்ட் இருக்கு ? என கேட்டதோடு, மாஸ்க் போட்டுக்கொண்டு இருப்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என தெரிவித்திருந்தார்.


நல்லா இருந்த விவேக்கிற்கு எதற்கு தடுப்பூசி போட்டீங்க ? இந்த கொரோனா வச்சு இங்க அரசியல் பண்ணிகிட்டு இருக்காங்க, விவேக்கிற்கு ஏதாவது ஆனதுன்னா நான் யாரையும் சும்மா விட மாட்டேன் என கடுமையாக பேசியதோடு,  இந்த கொரோனா கட்டுப்பாடுகளால் சினிமாத்துறையே நாசமாக போய்விட்டதாகவும், தொழிலாளர்கள் பசியில் வாடுவதாகவும் பேட்டி அளித்திருந்தார்.  அதுமட்டுமல்லாமல், கொரோனா தடுப்பூசி போடும் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைகளும் மாத்திரைகளும் தவறான வகையில் விநியோகம் செய்யப்படுவதாகவும் விமர்சித்திருந்தார் மன்சூர் அலிக்கான்.



 


இந்த பேட்டி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் தடுப்பூசிகள் குறித்து மாறுபட்ட பார்வைகளை முன் வைக்கத் தொடங்கினர். மன்சூர் அலிகான் பேச்சுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து வெளியிட்ட நிலையில்,  இது குறித்து, போலீசில் புகார் அளித்திருந்த கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், தடுப்பூசி பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பொய்யான தகவலை பரப்புவதாகவும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது கலகம் செய்ய தூண்டுதல், பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மன்சூர் அலிக்கான் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 





மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இனி யாரும் கொரோனா தடுப்பூசி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடாமல் இருக்கும்விதமாகவும், எச்சரிக்கை அளிக்கும் வகையிலும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.