உத்தரகாண்ட் - டேராடூனிலுள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி-2026 பருவத்தில் பள்ளி மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) VIII-ஆம் வகுப்பு சேருவதற்கான எழுத்துத்தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 01.06.2025 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது எனவும், இத்தகுதித்தேர்வானது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வினைக் கொண்டதாகவும் கீழ்க்குறிப்பிட்ட அறிவிப்பின்படியும் நடைபெறவுள்ளது.
எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு என 3 தாள்களைக் கொண்டிருக்கும். கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்களின் அறிவுத்திறன் ஆளுமை மற்றும் தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை சோதிக்க நேர்காணல் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் உட்பட ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 50% ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் பழைய வினாத்தாள்களின் தொகுப்பைப் பெற்றிட பொதுப்பிரிவினர் ரூ.600/- மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் ரூ.555/-க்கான கேட்பு வரைவேலையினை “THE COMMANDANT, RIMC FUND”, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN (BANK CODE-1399) UTTARAKHAND என்ற பெயரில் பெற்று ”Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun, Uttarkant, Pin – 248 003” என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பியும் மற்றும் rimc.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் மேற்படித் தொகையினை செலுத்தலாம்.
விண்ணப்பதார்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) வயது 01.01.2026 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 02.01.2013-க்குப் முன்னதாகவும் 01.07.2014-க்குப் பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் மேற்படி இராணுவக்கல்லுாரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அதாவது 01.01.2026 அன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை-600003 என்ற முகவரிக்கு 31.03.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும்.
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.