குட் நியூஸ் மக்களே ! சென்னைக்கு இனி மின்னல் வேகத்தில் போகலாம் ; தயாரான 4 வழிச்சாலை !
கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து கடலுார் மாவட்ட எல்லையான ஸ்ரீ முஷ்ணம் பிரிவு சாலை வரை 6.8 கி.மீ., தொலைவிற்கு 98 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

கடலூர்: விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் இடையே நான்கு வழிச்சாலை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பள்ளம் படுகுழியான VKT சாலைக்கு மாற்றாக, வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தபட உள்ளது.
சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக தினம்தோறும் பலாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், கடலுார் பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையிலான மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (சி.வி.எஸ்.,) தரம் உயர்த்தப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.
அதேபோல், விருத்தாசலம் நகரில் இருந்து சென்னை மார்க்கத்தில், உளுந்துார்பேட்டை நகரம் வரை 22 கி.மீ., தொலைவிற்கு, ஆசிய வங்கி நிதியுதவியுடன் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தின் கீழ் 136 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், சென்னை - ஜெயங்கொண்டம் சாலை, இருவழி சாலையாக இருந்ததாலும், அடிக்கடி உள்வாங்கி பழுதடைவதாலும், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
இதையடுத்து, விருத்தாசலம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், விருத்தாசலம் புறவழிச்சாலையில், சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8.5 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும், ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து கடலுார் மாவட்ட எல்லையான ஸ்ரீ முஷ்ணம் பிரிவு சாலை வரை 6.8 கி.மீ., தொலைவிற்கு 98 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
அதுபோல், அரியலுார் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் அம்மாவட்ட எல்லையான ஆத்துக்குறிச்சி முதல் ஜெயங்கொண்டம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 90 சதவீத பணிகள் முழுமையடைந்த நிலையில், இரு இடங்களில் கல்வெர்ட் மற்றும் கல்வெர்ட் இணைப்பு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு பெற வாய்ப்புள்ளதால், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னைக்கு எளிதில் செல்ல முடியும்.
வி.கே.டி., சாலைக்கு மாற்று வழி...!
தற்போது, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு, வடலுார், பண்ருட்டி, உளுந்துார்பேட்டை மார்க்கமாக வி.கே.டி., சாலையில் வாகனங்கள் சென்னைக்கு செல்கின்றன. அதில், பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் பள்ளம் படுகுழியாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலை
விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்ததும், கும்பகோணத்தில் இருந்து டி.பழூர் வழியாக ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்துார்பேட்டை வந்து, புறவழிச்சாலை வழியாக உளுந்துார்பேட்டை டோல்கேட் மூலம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளிதில் செல்ல முடியும். எனவே, வி.கே.டி., சாலைக்கு மாற்றாக, விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலை மாற வாய்ப்புள்ளது.
வெள்ளாறு பாலம் நிறைவு
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி - டி.வி.புத்துார் இடையே செல்லும் வெள்ளாற்றில், 20 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கியது. வெள்ளாற்றில் பில்லர்கள் எழுப்பப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்பேன்கள் எனப்படும் மேல் தளங்களை ராட்சத கிரேன்கள் மூலம் பில்லர்கள் மீது துாக்கி வைத்து, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. எனவே இனி மின்னல் வேகத்தில் செல்லலாம்.