பள்ளிக் கல்வித்துறையின் நலத் திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி சென்னை மாவட்டத்துக்கு, தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்துக்குக் கண்காணிப்பாளராக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் உமா, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கண்காணிப்பாளர் ஆக்கப்பட்டு உள்ளார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் நியமனம்
கோவை மாவட்டத்துக்கு சமக்ர சிக்ஷா கூடுதல் திட்ட இயக்குநர் உமா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கல்வி உயர் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த மாவட்டங்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதில்லை, அண்டை மாவட்டங்களுக்கும் சென்று கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பாளர்கள், நேரில் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மதுமதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை நலத்திட்டங்கள்
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு, தமிழ்க் கூடல், மணற்கேணி, மாதிரிப் பள்ளிகள், தகை சால் பள்ளிகள், கல்விச் சுற்றுலா, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி, புதுமைப் பெண், திசைதோறும் திராவிடம், மாணவர் மனசு, மதிப்பீட்டுப் புலம், மகிழ் முற்றம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.