விழுப்புரம்: திண்டிவனத்தில் வெளி மாநிலத்தவர்களின் வீட்டிலிருந்த 7 இருசக்கர வாகனம் தீ பற்றி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 1, பிள்ளையார் கோவில் தெருவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கிருபாகரன் என்பவர் வீடு உள்ளது. இந்நிலையில் அவர் வீட்டின் கீழ் பகுதியில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆலன் என்பவர் தலைமையில் சுமார் 16 பேர் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சீசனுக்கு ஏற்றவாறு பெட்ஷீட், தார் பாய், சேர் போன்றவைகளை விற்பனை செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் இவர்கள் 20 நாட்களுக்கு முன் 16 பேரும் தங்களது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்குள் நிறுத்திவிட்டு தங்களது சொந்த ஊருக்கு விடுமுறைக்கு சென்று உள்ளனர். இன்று காலை திடீரென வீட்டிலிருந்து கரும் புகை வந்ததை கண்டு அந்தப் பகுதி பொதுமக்கள் திண்டிவனம் தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ் இடத்திற்கு விரைந்து வந்த முருகையன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்து 7 இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் இருசக்கர வாகனம் முழுவதும் சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வீடு முறையாக பராமரிக்கப்படாததாலும் மின் இணைப்புகள் சரி செய்யப்படாத காரணத்தால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.