பெற்றோர், குழந்தைகளுக்கு இடையேயான உறவுமுறை முதிர்ச்சியாக இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டும். பெற்றோர், குழந்தைகளுக்கான ஸ்பேஸை வழங்கி அதில் தலையிடாமல் இருக்க வேண்டும். அதுபோல் பெற்றோர்களுக்கான ஸ்பேஸில் குழந்தைகளின் தலையீடு இருக்கக் கூடாது. தலைமுறை இடைவெளி காரணமாக ஏற்படும் சிக்கல்கள், விரிசல்களைத் தவிர்த்துக் கொண்டால், இருவர் இடையில் உறவு சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பிள்ளைகளுக்கான ஸ்பேஸை வழங்க வேண்டும்:
குறிப்பாக, கல்லூரி காலத்தில் பிள்ளைகளுக்கான ஸ்பேஸை பெற்றோர் தரும் போது, தாங்கள் எடுத்த முடிவினை, அவர்களது விருப்பு வெறுப்புகளை அவர்களாகவே மறுபரிசீலனை செய்ய சந்தர்ப்பம் ஏற்படும். சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்காது. அதனால் அதை செய்யாமல் தவிர்ப்பர். அதை செய்யச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.
குறிப்பாக, என்ன படிக்க வேண்டும் என்பதில் உங்கள் முடிவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். ஆலோசனை வழங்குகள். ஆனால், கடைசி முடிவை அவர்களிடமே விட்டுவிடுங்கள். பிள்ளைகளின் தீய பழக்கவழக்கங்கள் ஏதேனும் தெரிய வந்தால், கேரக்டர் அசாசினேஷன் செய்ய வேண்டாம். அவர்களிடம் பேசுங்கள். அதன் விளைவுகளை பேசி புரிய வையுங்கள்.
அதேபோல, பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை தெரிந்து கொள்ளுங்கள். கண்டிப்புடன் இருக்க வேண்டிய இடத்தில் கண்டிப்புடனும் நண்பராக இருக்க வேண்டிய இடத்தில் நட்பாகவும் பழக வேண்டும். எந்த உடை உடுத்த வேண்டும், எதை உடுத்த கூடாது என உங்கள் முடிவுகளை திணிக்க வேண்டாம். அவர்களின் போக்கிலேயே விட்டுவிடுங்கள். கல்லூரி காலத்தில், காதல் வருவது இயல்பான ஒன்று. மகன்/மகள்களின் காதல் விவகாரங்கள் தெரிய வந்தால் அதை முதிர்ச்சியுடன் கையாள வேண்டும். அவர்களிடம் பேசுங்கள், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். நீங்கள் சொல்லி புரிந்து கொள்வதை விட, அவர்களே கற்று தெரிந்து கொள்வது அவர்களை இன்னும் மெச்சூராக்கும்.
அவர்கள், தங்களின் அனுபவத்தை உங்களிடம் பகிரந்து கொள்வதற்கான ஸ்பேஸை வழங்குங்கள். பிரச்னை என்றால், அவர்கள் உங்களை தேடி வர வேண்டிய இடத்தில் நீங்கள் உங்களை வைத்து கொள்ளுங்கள். ஆனால், இவற்றை எல்லாம் நீங்கள் சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரியாக பெற்றோர்களின் அணுகுமுறை, பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். உங்களது நல்ல பழக்கங்களை பார்த்துப் பார்த்து பிள்ளைகள் தானே ஏற்றுக் கொள்வார்கள். அதனால் பிள்ளைகள் எந்த பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்களோ அதை பெற்றோர் முதலில் கடைப் பிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முதல் ஹீரோக்கள் பெற்றோர்கள்தான்:
பள்ளி காலத்தில், இரவில் குழந்தைகள் பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்தால், குழந்தைகளின் முன்பாக, பெற்றோர்களும் ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர்களே வழிகாட்டும் ஹீரோக்கள் ஆகலாம்.
குழந்தைகள் எளிய முறையில் நன்னடத்தையுடன் வளர எளிமையான வாழ்க்கை மட்டுமே உதவும். உணவு, உடை, வீடு இவற்றில் பெற்றோர் எளிமையாக இருந்தால், எளிமையாக இருத்தல் குழந்தைகளைத் தானே தொற்றிக் கொள்ளும். பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டாம். கொண்டாட்டத்திற்காக செலவு செய்ய நினைப்பதில் பாதியை செலவு செய்து விட்டு மீதத் தொகையை பொருளாதார ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடப்படும் குழந்தையைக் கொண்டே வழங்கச் செய்யுங்கள். இந்தப் பழக்கத்தால் பிறருக்குப் பகிரும் பழக்கம் ஏற்படும். பிறர் சிரமங்களைப் புரியும் பக்குவமும் ஏற்படும்.
எது தேவை, எது தேவையில்லை?
ஓய்வு நேரத்தை குழந்தைகளை விருப்பப்படி செலவு செய்யட்டும். குழந்தைகளை வீட்டுக்குள் விளையாடும் போது, வாசிக்கும் போது பெற்றோர் டிவி பார்க்க வேண்டாம். அலைபேசியை பார்க்க வேண்டாம். அலைபேசியில் பிறருடன் பேச வேண்டாம். குழந்தைகளிடம் உதவி ஏதும் தேவையா? சந்தேகம் எதுவும் உண்டா என்று கேளுங்கள். குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கனிவான வழிகாட்டுதல்தான் தேவை. பெற்றோர்களின் போரடிக்கும் அட்வைஸ் தேவை இல்லை.
சில சம்பவங்களைப் பிள்ளைகளிடம் சொல்லி, அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க சொல்லச் சொல்லுங்கள். அதனால் வாழ்க்கையில் சில கட்டங்களில் சோதனை வரும் போது அவர்கள் தடுமாறாமல், சோர்ந்து போகாமல் இருப்பார்கள். எளிதாக முடிவு எடுப்பார்கள். இவை அனைத்தும் கடினமானவை அல்ல. அனைத்து பெற்றோராலும் கடைப்பிடிக்க எளிதானவையே.