புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு நாளை புதன்கிழமை ( 16.10.2024)  விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வியமைச்சர்  ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை 



புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வரும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவருமான ரங்கசாமி தலைமையில் முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த பருவமழையை எதிர்கொள்ள துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்...


இன்றைய கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், அனைத்து நீர் நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழிப்பாதைகளை துரிதமாக தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கக்கூடிய நிவாரண மையங்களான பள்ளிகளின் கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அக்கட்டிடங்களை, குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலத்துக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.


உள்ளாட்சித்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்


மழை, வெள்ள காலங்களில் மீட்புப் பணிகளுக்காகத் தேவைப்படும் உபகரணங்களை பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மழையில் சாயும் மரங்களை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மழை பற்றிய வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படாத வகையில் தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மின்கம்பங்களின் நிலைத்தன்மையை ஆய்வு செய்து அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.


மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.அனைத்து அரசுத் துறைகளிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் திறக்க வேண்டும். மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் உடனுக்குடன் நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான பம்பு உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்பது உள்ளிட்ட உத்தரவுகளை, முதல்வர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் வலியுறுத்தினார்.


இக்கூட்டத்தில் பேரவைத்தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், வளர்ச்சி ஆணையர் ஆஷிஷ் மாதோவ்ராவ் மோரே, அரசுச் செயலர்கள் ராஜூ, ஜவஹர், ஜெயந்தகுமார் ரே, ஆட்சியர் குலோத்துங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.