குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 7,382 காலி இடங்கள் இருந்த நிலையில், மொத்தப் பணியிடங்கள்  10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான திருத்தப்பட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


7,382 இடங்களோடு கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாகக் கடந்த டிசம்பர் மாதம் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.   


குரூப் 4 தேர்வு


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. இதில் மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன.  7,301 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டன. 


21.8 லட்சத்தைக் கடந்த விண்ணப்பப் பதிவு


இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.8 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.


இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் ஜூலை மாதம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை சுமார்15 லட்சம் பேர் எழுதினர்.


தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. 


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் தாமதமான நிலையில் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என்றும், பிறகு பிப்ரவரியிலும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் தகவல் வெளியானது. எனினும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 


கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு


இந்நிலையில் குரூப் 4  அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


2023 தேர்வு எப்போது?


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


திருத்தி அமைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி அறிக்கையைக் காண: https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM_%207B_2022.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.