தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் (டிச.23) அரையாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 11ஆம் தேதிக்குத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை இன்று (டிச.23) தொடங்கி உள்ளது. . ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை
தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் இயக்குநர் இது குறித்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
இதற்கிடையே தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அரையாண்டு விடுமுறையில் எந்த வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மீறி நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கன மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களால், முழுமையாக அரையாண்டுத் தேர்வுகளை எழுத முடியவில்லை. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகளும், 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட தேர்வுகளும் இன்னும் நடைபெறவில்லை.
அவர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஜனவரி 2 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.