கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகளின் கூந்தல் வெட்டப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலான நிலையில் அதில் உண்மை இல்லை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.


அந்த வீடியோ புற்றுநோயாளிகளுக்காக தலைமுடி தானம் செய்த வீடியோ எனவும் மதரீதியான வெறுப்பு, வதந்தியைப் பரப்ப வேண்டும் என்றும் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசின் ஃபேக்ட் செக் பிரிவு கூறி உள்ளதாவது:


’’கிறிஸ்தவப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவிகளின்‌ கூந்தலை வெட்டுவதாகப்‌ பள்ளிக் கல்வித்துறையைக்‌ குறிப்பிட்டு காணொளி ஒன்று சமூக வலைதளங்களில்‌ பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும்‌ பொய்யான தகவல்‌.






இந்தக் காணொளி கேரள மாநிலம்‌ செம்மணாரில்‌ உள்ள செயிண்ட்‌ சேவியர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ எடுக்கப்பட்டது. கடந்த 2019ஆம்‌ ஆண்டு 39 பள்ளி மாணவிகள்‌ புற்று நோயாளிகளுக்காக தங்கள்‌ தலைமுடியை தானம்‌ செய்தபோது எடுக்கப்பட்டதாக இந்த காணொளி சமூக வலைதளங்களில்‌ பகிரப்பட்டுள்ளது.


கேரளாவில்‌ புற்றுநோயால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு மாணவிகள்‌ தலைமுடியை தானம்‌ செய்த நிகழ்வில்‌ எடுக்கப்பட்ட காணொளியை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர்‌.


மத வெறுப்பைத்‌ தூண்டாதீர்‌! வதந்தியைப்‌ பரப்பாதீர்‌!’’


இவ்வாறு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.