அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்., 2 காந்தி பிறந்த தினம், நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய 6 நாட்களில், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.


இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் வரவு, செலவுக் கணக்கு சமர்ப்பிக்கப்படும். அரசு நலத் திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மக்கள் தங்கள் ஊராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கைகள் வைப்பர். அதன் அடிப்படையில், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.


கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்


இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து பள்ளி சாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,‌ "புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-2027” -ஆம்‌ கல்வியாண்டிற்குள்‌ "முழு எழுத்தறிவு பெற்ற நகர/ கிராம பஞ்சாயத்து” என்கிற இலக்கை அடையும்‌ வகையில்‌ வருகின்ற 02.10.2024 (அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாள்‌) அன்று அனைத்து நகர மற்றும்‌ கிராம பஞ்சாயத்துகளிலும்‌ நடைபெற உள்ள கிராமசபைக்‌ கூட்டங்களில்‌ தீர்மானத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அலுவலர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை அரசுப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்


நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்ட வயது வந்தோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவைக் கற்றுக்கொடுக்க, மத்திய அரசு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. 


2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களை கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் வயது வந்தோருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.