வானிலை முன்னறிவிப்புக்கு TN ALERT என்னும் செயலி தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மழைப் பொழிவு, பெய்யும் மழையின் அளவு, ஏரியின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை இதன்மூலம் அறிய முடியும். TN SMART மூலம் தகவல் பெறப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.


வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்


வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.




’வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும். கடந்த ஆண்டுகளில் அவ்வாறு பணியாற்றியதாலேயே சீர்கேடுகள் தடுக்கப்பட்டன’ என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


’’இந்த ஆண்டும்‌ பேரிடர்களின்‌ தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில்‌, பெய்த மழையின்‌ அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில்‌ தெரிந்தால்தான்‌, அணைகளில்‌ நீர்‌ திறப்பு மேலாண்மை, வெள்ள
முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளைச்‌ சரியாகச்‌ செய்ய முடியும்‌. அதற்காக, நாம்‌ தற்போது 1400 தானியங்கி மழைமானிகளையும்‌, 100 தானியங்கி வானிலை மையங்களையும்‌ நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம்‌.


இந்தத்‌ தகவல்கள்‌ பொதுமக்களுக்கும்‌ அவ்வப்போது கிடைத்தால்‌ அவர்கள்‌ தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும்‌ என்பதால்தான்‌ ஒரு முக்கியமான செயலியை உருவாக்கி
இருக்கிறோம்‌.


செயலியில் என்னென்ன இருக்கும்?


வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை  அளவு, நீர்த்தேக்கங்களில்‌ நீர்‌ இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு TN ALERT என்னும்‌ கைப்பேசி
செயலியை உருவாக்கியுள்ளது.


மழைக்காலத்தில்‌ அதிகம்‌ பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள்‌தான்‌.  ஆழ்கடலில்‌ மீன்‌ பிடிக்கச்‌ செல்லும்‌ மீனவர்களுக்கு புயல்‌, கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத்‌ தொடர்பு சாதனங்கள்‌ மூலமாக உரியநேரத்தில்‌ கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள்‌ இந்தக்‌ காலக்கட்டத்தில்‌ மிகுந்த எச்சரிக்கையுடன்‌ இயங்க வேண்டும்‌’’.


இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். 


இக்கூட்டத்தில்‌, நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, நகராட்சி நிருவாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. ராமச்சந்திரன்‌, நிதி, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ. அன்பரசன்‌, மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை அமைச்சர்‌ அனிதா ஆர்‌. ராதாகிருஷ்ணன்‌, மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு, தலைமைச்‌ செயலாளர்‌ நா.முருகானந்தம்‌, காவல்துறை தலைமை இயக்குநர்‌ சங்கர்‌ ஜிவால்‌, அரசு துறைச்‌ செயலாளர்கள்‌, துறைத்‌ தலைவர்கள்‌, காவல்துறை மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.


சென்னையில் நிகழ்நேர வெள்ள முன்னெச்சரிக்கை ஆமைப்பு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலநிலை மாற்றத்தால், புவியின் தட்ப வெப்பமும் வானிலையும், பொது மக்களால் கணிக்கவே முடியாத நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.