தங்களின் கட்சி சின்னமாக உள்ள யானையை விஜய்யின் தவெக கட்சி தங்களின் கொடியில் பயன்படுத்தி இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்த நிலையில், இந்த புகார் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார்.
தவெகவுக்கு எதிராக BSP அளித்த புகார்:
விஜய்யின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடத்த உள்ளார் விஜய். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தவெக கட்சியினர் பெருமூச்சு விடும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தவெகவுக்கு எதிராக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் அளித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை படம் இடம்பெற்றது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் அளித்த பதில் என்ன?
கட்சி கொடியில் யானை படம் பயன்படுத்த ஆட்சேபனை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி அதற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், இதில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது.
அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது என்று விளக்கம் அளித்துள்ளது. இது தவெகவினரை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் களம்:
தமிழ்நாடு அரசியல் களத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இதற்கிடையே, கட்சியின் முதல் மாநாட்டில், கட்சியின் கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.