அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 9820 இடங்களில் மாணவர்கள் நேரடியாக சேரலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் உள்ள164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் மொத்தம் 1,07,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.


முன்னதாக விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க (மே 19) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, மே 22 விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டது. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பித்தனர்.


இந்த நிலையில், சுமார் 10 ஆயிரம் காலி இடங்கள் காலியாக உள்ளதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப் பிரிவுகளில் உள்ள 9820 காலி இடங்களில் மாணவர்கள் நேரடியாக சேரலாம் என்று உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து உயர் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது. 


மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023- UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம்’’ என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் இடங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள: https://static.tneaonline.org/docs/arts/UG-VACANCY-2023.pdf?t=1692178782496 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விரும்பும் கல்லூரிகளில் சேரலாம்


இளநிலைப் படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 416 இடங்கள் மட்டுமே நிரம்பிய சூழலில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 9820 காலி இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ள சூழலில், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களும், துணைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களும் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் சென்று சேரலாம். குறிப்பாக 21ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று சேர்ந்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு 93634 62070,93634 62007, 93634 62042,93634 62024 ஆகிய எண்களை மாணவர்கள் அழைத்துப் பேசலாம். 


இ- மெயில் முகவரி: tngasa2023@gmail.com


இதையும் வாசிக்கலாம்: Rs 1000 for School Students: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000: திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?