அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 அளிக்கும் வகையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான அறிவிப்பு  வெளியாகி உள்ளது. 


இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 


''அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ திறனை கண்டறிவதற்கும்‌ அவர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌ 2023- 2024 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


அரசுப்‌ பள்ளிகளில்‌ மாநிலப்‌ பாடத்‌ திட்டத்தின்கீழ்‌ பதினொன்றாம்‌ வருப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்‌. இந்தத் தேர்வில் 1000 மாணவர்கள்‌ (நடைமுறையில்‌ உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி 500 மாணவர்கள்‌, 500 மாணவியர்கள்‌) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். குறிப்பாக உதவித் தொகையாக ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000  (மாதம்‌ ரூ.1000, வீதம்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்‌) இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்‌.


தேர்வு முறை எப்படி?


தமிழ்நாடு அரசின்‌ 9 மற்றும்‌ 10ஆம்‌ வகுப்புகளின்‌ கணிதம்‌, அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத் திட்டங்களின்‌ அடிப்படையில்‌ கொள்குறி வகையில்‌ இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்‌. ஒவ்வொரு தாளிலும்‌ 60 கேள்விகள்‌ இடம்பெறும்‌. முதல்‌ தாளில்‌ கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. இரண்டாம்‌ தாளில்‌ அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. முதல்‌ தாள்‌ காலை 10.00 மணி முதல்‌ 12.00 மணி வரையிலும்‌, இரண்டாம்‌ தாள்‌ பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ 4:00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.


எப்போது தேர்வு?


தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வு 23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு 2023- 2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌, விண்ணப்பிக்கலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.


மாணவர்கள்‌ விண்ணப்பங்களை  என்ற இணைய தளத்தில்‌ 07.08.2023 முதல்‌ 18.08.2023 வரை பதிவிறக்கம்‌ செய்யலாம்., பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ தேர்வுக்‌ கட்டணத்‌ தொகையாக ரூ.50 செலுத்த வேண்டும். அதைச் சேர்த்து மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌: ஆகஸ்ட் 18ஆம் தேதி அதாவது 18.08.2023 ஆகும்''.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.


திறமை மிகுந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் சார்பில் முறையே ஊரக மற்றும் தேசிய திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: Naan Mudhalvan UPSC Scheme: நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு -விண்ணப்பிப்பது எப்படி?