மகிழ்ச்சி பாடத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரின் பிறந்தநாளையும் கொண்டாட டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் டெல்லி அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளுக்கு உள்ளே நன்றி உணர்வு, ஊக்கம் மற்றும் நேர்மறை சிந்தனையை அதிகரிக்கும் பொருட்டு, புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பிறந்த நாள்கள் கொண்டாடப்படும்.
ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் வரும் மாணவர்களின் பிறந்தநாட்கள் அடுத்த வேலை நாளை அன்று கொண்டாடப்படும். நீண்ட விடுமுறைகளில் வரும் மாணவர்கள் பிறந்த நாள், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் கொண்டாடப்படும்’’ என்று டெல்லி பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்லி அரசுப் பள்ளிகள் சிலவற்றில் மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் “மகிழ்ச்சி பாடத்திட்டம்”. இது தற்போது கிட்டத்தட்ட 1030 அரசுப் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. தினசரி 35 நிமிட கால அளவுள்ள இந்த மகிழ்ச்சி வகுப்பானது, நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது.
மகிழ்ச்சி பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
* சுய விழிப்புணர்வு,
* வெளிப்பாடு,
* மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது
* உறவுகளைப் புரிந்து, செயல்படுவது.
அதென்ன மகிழ்ச்சி பாடத்திட்டம்? [Happiness Curriculum]
முன்னதாக மகிழ்ச்சி பாடத்திட்டம் குறித்துப் பேசிய டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா, ''மகிழ்ச்சி பாடத்திட்டம் என்பது அறநெறிகளை மாணவர்களுக்குப் போதிப்பதற்கான பாட வகுப்பல்ல. அன்றாட வாழ்க்கையில் நற்பண்புகளை, நன்னடத்தையைப் பின்பற்ற மாணவர்களின் மனநிலையை வளப்படுத்துவதற்கான முயற்சி இது. தங்களுடைய உணர்வுகளை அறிவியல்பூர்வமாக உற்றுநோக்கிப் புரிந்து செயல்பட மாணவர்களை மகிழ்ச்சி பாடத்திட்டம் தயார்படுத்துகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வெளி உலகை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். சரியாகச் சொல்வதானால் உணர்வுகளின் அறிவியல் பாடம் இது. ஏனெனில் மாணவர்கள் தங்களுடைய உணர்வுகளை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டால் அவர்களால் மேம்பட்ட மனிதர்களாக உருவெடுக்க முடியும்'' என்று மணிஷ் சிசோடியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்:
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் https://tamil.abplive.com/education/school-education-department-orders-that-special-classes-should-not-be-held-during-quarterly-exam-holidays-77022/amp
MBBS, BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ்: கலந்தாய்வு, வகுப்புகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு.. இதை செக் பண்ணுங்க..
https://tamil.abplive.com/education/mbbs-bds-counselling-classes-start-dates-mcc-announcement-know-in-detail-77044/amp