மாணவர்களை கால் பிடித்துவிடச் சொல்லி ஓய்வெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே கிழக்கு ராஜாபாளையம் பகுதி உள்ளது. இங்கே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு அருகில் உள்ள காமக்காபாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ஜெயப் பிரகாஷ். இவர் கிழக்கு ராஜாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில்கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மது போதையில் கூட பள்ளிக்கு வரும் ஆசிரியர்?
அவர் வகுப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் மது போதையில் கூட பள்ளிக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று (நவ.22) பள்ளி வகுப்பறையில், தன்னுடைய மாணவர்களை கால் அழுத்திவிடச் சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஜெயப் பிரகாஷ். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஆசிரியர்களில் யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனத்திற்கு வந்தது. அவர் உத்தரவின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை ஆசிரியர் மீது எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஜெயப் பிரகாஷ் பணியிடை நீக்கம்
அதாவது ஆசிரியர் ஜெயப் பிரகாஷ் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மாணவர்களை துன்புறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ