1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை 2018-ல் 59.1 சதவீதம் ஆகவும் 2022-ல், 71.1 ஆகவும் உள்ளது. இது 2024-ல் 62.2 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் 605 கிராமங்களில் உள்ள 6.5 லட்சம் குழந்தைகளைக் கொண்டு ASER ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் 20 குடும்பங்கள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. 5 முதல் 16 வயது உடையவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.


அதாவது 2024-க்கான ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER: Annual Status of Education Report) நடந்தது. இதன் முடிவுகளை மத்தியக் கல்வி அமைச்சசகம் வெளியிட்டுள்ளது.


சிறிய அளவு முன்னேற்றம்


அதில், மாணவர்கள் மத்தியில் அடிப்படை வாசித்தல் மற்றும் கணிதத் திறன்களில் கோவிட் காலத்துக்கு முந்தைய நேரத்தைவிட, சிறிய அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அதே நேரத்தில் 3 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோரால், 2ஆம் வகுப்பு தரத்திலான எழுத்துகளை வாசிக்க முடியவில்லை. அல்லது எளிமையான கணக்குகளைச் செய்ய முடியவில்லை.


2024-ல் சரிந்த மாணவர் சேர்க்கை


2018, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை கூறப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் சேர்க்கை 2018-ல் 59.1 சதவீதம் ஆகவும் 2022-ல், 71.1 ஆகவும் உள்ளது. இது 2024-ல் 62.2 ஆகக் குறைந்துள்ளது.


இதுவே மாணவிகளின் சேர்க்கை வீதம் 2018, 2022, 2024-ல் முறையே 65.7, 75.4, 67.0 ஆக உள்ளது. அதேநேரத்தில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் சேர்க்கை 2022-ல் 76.2 ஆக இருந்த நிலையில், 2024-ல் 71.3 ஆக சரிந்துள்ளது. மாணவிகளின் சேர்க்கை வீதத்தைப் பொறுத்தவரை, 2022-ல் 80.8 ஆக இருந்த நிலையில் 2024-ல் 75.3 ஆகக் குறைந்துள்ளது.


இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.