பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றுகூறி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடக்கும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.


சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


டிட்டோஜாக் முடிவின்படி மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டம் எங்கே? எப்போது?

நாள்: 08.02.2025 சனிக்கிழமை 

1.சென்னை

2.விழுப்புரம்

3.திருச்சி

15.02.2025 சனிக்கிழமை

தஞ்சை

கோவை

வேலூர்

22.02.2025 சனிக்கிழமை

சேலம்

மதுரை

திருநெல்வேலி


ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


04/02/2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி


06/02/2025 மாவட்டத்தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்


14/02/2025 வட்ட அளவில் மாலை நேர ஆர்ப்பாட்டம்


25/02/2025 மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ளது.


அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், கடுமையான போராட்டங்கள் அறிவிக்கப்படும். 


இவ்வாறு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பின்னணி என்ன?


2017 முதல் பொதுக் கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுக்கான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராடி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம், இழந்த சரண் விடுப்பை மீட்டெடுப்பது, தமிழக அரசில் 3.5 இலட்சத்திற்கு மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பு, ’’ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் என்னவாகின என்று தெரியவில்லை. அதனால் குழு அமைப்பதை ஜாக்டோ ஜியோ ஏற்கவில்லை.


என்னென்ன கோரிக்கைகள்?


கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக அரசு முன்வைத்த வாக்குறுதிகள் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், சரண் விடுப்பு ஒப்படைப்பு திரும்பப் பெறுதல், உயர் கல்வி உதவித்தொகை, மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை’’ என்று ஜாக்டோ ஜியோ குற்றம்சாட்டி உள்ளது.


ஜாக்டோ ஜியோ அமைப்பு கடந்த ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.