தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக தைப்பூசம் திகழ்கிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 11ம தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தைப்பூசம்:
தைப்பூசம் திருவிழாவில் முருகனின் அறுபடை வீடுகளில் பல லட்சம் பக்தர்கள் கூட்டம் குவிவார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூச திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த சேகர்பாபு கூறியதாவது,
இலவச பேருந்து:
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதான உணவின் தரம், உறுதி செய்யப்படும். தைப்பூசம் மற்றும் அதையொட்டி 2 நாட்கள் என 3 நாட்கள் பழனி முருகன் கோயிலில் தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குறிப்பிட்ட பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இயக்கவும் முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். பழனி முருகன் கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்திற்கான மறு ஏலம் அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.
2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்
கடந்தாண்டு பழனி தைப்பூச திருவிழாவில் 12 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைப்பூச திருவிழா நடக்கும் 10 நாட்களில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
பழனி முருகன் கோயில், அதன் 7 உபகோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள உபகோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலத்த ஏற்பாடு:
தைப்பூ திருவிழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடக்க உள்ளது. தைப்பூச நாளான பிப்ரவரி 11ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்க உள்ளது. தைப்பூச கொண்டாட்டத்திற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. பழனி மட்டுமின்றி முருக பக்தர்கள் அதிகளவு குவியும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி என பல கோயில்களிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, அங்கப்பிரதட்சணம் என தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மேலும், பழனி கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பழனி மட்டுமின்றி திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட கோயில்களுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இவர்கள் பாத யாத்திரையாகவும், மாலை அணிந்தும் கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.