சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுமார் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
சென்னை, திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு இரண்டாவது தளத்தில் பள்ளியின் வேதியியல் ஆய்வகம் இயங்கி வருகிறது.
இதில் இருந்து வாயு கசிந்ததால் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக் கருதி பள்ளி மாணவர்கள் அனைவரையும் நிர்வாகம் வெளியேற்றி உள்ளது.
கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம்
2ஆவது மாடியில் உள்ள ஆய்வகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறை துரிதமாகச் செயல்பட்டு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேபோல மேலும் சிலருக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதில், 3 மாணவர்கள் நினைவு திரும்ப முடியாத அளவுக்கு மயக்கத்துக்குச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெற்றோர் வாக்குவாதம்
முதற்கட்ட விசாரணையில், பள்ளி ஆய்வகத்தில் வெளியான வாயுக் கசிவே முக்கியக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அங்கு திரண்ட பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி தரப்பில் இருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வட சென்னை திமுக எம்.பி. ஆய்வு
திருவொற்றியூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல அம்மோனியா வாயு கசிந்துள்ளதா என்று காண தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அங்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். வட சென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.