2023- 2024 ஆம்‌ ஆண்டில்‌ முழுநேர முனைவர்‌ பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை தெரிவித்துள்ளது. 


முழுநேர முனைவர்‌ பட்டப்‌ படிப்பு மேற்கொள்ளும்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.100,000,/- வீதம்‌ 2021 - 2022ஆம்‌ ஆண்டு முதல்‌ வழங்கப்படும்‌ என அரசு ஆணையிட்டது.


எனவே கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ முழுநேர முனைவர்‌ பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு நோ!


1) தமிழ்நாட்டில்‌ உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்‌ முழுநோ முனைவர்‌ பட்டப்படிப்பு (பிஎச்.டி.) மேற்கொள்ளும்‌ தமிழ்நாட்டைச்‌ சார்ந்த ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ இன மாணாக்கர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்‌. பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள்‌ பயன்பெற இயலாது.


2) இத்திட்டத்தின்கீழ்‌ பயனடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பான ரூ.8 லட்சத்திற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.


3) இத்திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி ஊக்கத்‌ தொகை வேண்டி விண்ணப்பிக்க முதுகலைப்‌ பட்டப்‌ படிப்பில்‌ 50% விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.


4) 1600-க்கும்‌ அதிகமான எண்ணிக்கை அளவில்‌ கல்வி ஊக்கத்‌ தொகை வழங்கக்கோரி விண்ணப்பங்கள்‌ வரப்பெறும்‌ நேர்வில்‌ மாணாக்கர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ அடிப்படையில்‌ 1600 பயனாளிகள்‌ தேர்வு செய்யப்படுவர்‌.


5) ஒன்றுக்கும்‌ மேற்பட்ட கல்வி உதவித்‌ தொகை , நிதியுதவித்‌ திட்டத்தின்‌ (போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை, ஜேஆர்எஃப், DPI Fellowship, RUSA, etc) கீழ்‌ பயன்‌ பெறுபவராக இருத்தல்‌ கூடாது. மாணவர்கள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌


பெறப்படும்‌ நிதியுதவி அல்லது பிற திட்டங்களில்‌ பெறும்‌ நிதியுதவி இவற்றில்‌ அதிக பயன்தரும்‌ திட்டத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாம்‌. மாணாக்கரின்‌ விருப்புரிமையின்‌ அடிப்படையில்‌ குறைவான பயன்‌ தரும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பெறப்பட்ட நிதி உதவியை உரிய கணக்குத்‌ தலைப்பில்‌ அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும்‌.


6 ஆண்டுகளுக்கு மட்டும்‌ ஊக்கத்‌ தொகை


6) அதிகபட்சமாக ஆறாண்டுகளுக்கு மட்டும்‌ ஊக்கத்‌ தொகை அளிக்கப்படும்‌.


7) முதல்‌ வருடம்‌ சேர்க்கையின்‌ அடிப்படையில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி ஊக்கத்‌ தொகை வழங்கலாம்‌. இரண்டாம்‌, மூன்றாம்‌, நான்காம்‌, ஐந்தாம்‌ மற்றும்‌ ஆறாம்‌ ஆண்டுகளுக்கு மாணவர்‌ பயிலக்‌ கூடிய படிப்பு பிரிவின்‌ துறை தலைமை அலுவலர்‌ மற்றும்‌ ஆராய்ச்சி வழிகாட்டி அலுவலரால்‌ முந்தைய ஆண்டுகளில்‌ மாணவரால்‌ மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்‌ திருப்திகரமான முன்னேற்றம்‌ குறித்து அளிக்கப்படும்‌ சான்றிதழின்‌ அடிப்படையில்‌ வழங்கப்படும்‌.


8) விண்ணப்பிக்க கடைசித் தேதி டிசம்பர் 31.


9) 31.12.2023-க்கு பிறகும்‌, விளம்பரம்‌ வெளியிடுவதற்கு முன்னர்‌, பெற்ற விண்ணப்பங்கள்‌ பரிசீலனைக்கு ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது. ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்கள்‌ எனில்‌ விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்‌, ஆதிதிராவிடர்‌ நல இயக்குநரகம்‌, எழிலகம், சேப்பாக்கம்‌, சென்னை -600 005,


10) 2023-2024 ஆம்‌ ஆண்டு கல்வி ஊக்கத்‌ தொகை பெற மாணாக்கர்கள்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌. முந்தைய ஆண்டு விண்ணப்பங்கள்‌ மூலம்‌ கல்வி ஊக்கத்‌ தொகை பெற மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்திருப்பின்‌ கல்வி ஊக்கத்‌ தொகை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.


11) முழு நேர முனைவர்‌ பட்டப்‌ படிப்புப்‌ பயில பல்கலைக்‌ கழகத்தால்‌ ஆராய்ச்சிக்‌ காலம்‌ குறிப்பிடப்பட்ட பதிவு அனுமதிக்‌ கடிதம்‌, நெறியாளரின்‌ உறுதிமொழி கடிதம்‌ மற்றும்‌ வழிக்காட்டியின்‌ பரிந்துரை கடிதம்‌ கட்டாயம்‌ இணைக்கப்பட வேண்டும்‌. Bonafide சான்றிதழ்‌ மட்டும்‌  இணைக்கப்பட்டிருந்தால்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.


மேலும்‌, கல்வி நிறுவன முதல்வரது கையொப்பம்‌ மற்றும்‌ பல்கலைக்கழக பதிவாளரின்‌ பரிந்துரையுடன்‌ விண்ணப்பம்‌ வரப்பெற வேண்டும்‌. தவறும்‌ பட்சத்தில்‌ விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.


இவ்வாறு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tn.gov.in/forms/deptname/1