10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேர்வுத்துறை தீர்வளித்துள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 


தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு  பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், முதலில்  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஏப்ரல் 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. 


இந்த தேர்வை தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள், தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் எழுதினர். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,025 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


ஆங்கில வினாத்தாளில் குழப்பம் 


இப்படியான நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஆங்கில மொழித்தாளுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை ஆர்வமுடன் எழுதச் சென்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதில் ஒரு மதிப்பெண் பிரிவில் கேள்வி எண் 4,5,6 ஆகியவை குழப்பமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். வழக்கமாக  இந்த கேள்விகள் ANTONYMS என குறிப்பிடப்படும் நிலையில், கேள்வித் தாளில் அப்படியான் வார்த்தை இல்லாததால் தேர்வு எழுதியவர்கள் குழம்பி போயினர், 


இதனால் 4, 5, 6 வினாக்களுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2 மதிப்பெண்கள் பிரிவில் கேள்வி எண் 28க்கும் பதில் எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 


விடைத்தாள் திருத்தும் பணி


இதற்கிடையில் 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. இதற்காக 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு 60 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியொல் ஈடுபட உள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: TN 10th Exam 2023: 10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு கேள்விகளில் பிழைகள்; கூடுதல் மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை