அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2023- 24ஆம் நிதியாண்டில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்ந்து 5 முக்கியத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. 


அதைத் தொடர்ந்து சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவற விடாதீர்கள். மாணவர்களிடம் நலன் பற்றி நான் தனியாக அவர்களிடம் உரையாடினேன். அப்போது ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை உண்ணவில்லை எனக் கூறினர். 


இதையடுத்து பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டேன். அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.  


பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார். 


அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாகக் காலைச் சிற்றுண்டி திட்டமானது 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. 




எந்தப் பள்ளிகள்?


முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட்டது. மதுரையில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 4,388 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். 


23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுசெய்யப்பட உள்ளதாக, முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.